'இன்கோ' தொழிற்சாலைகளின் நிலுவை தொகை ரூ.52.38 கோடி! 50 சதவீதம் விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பு
'இன்கோ' தொழிற்சாலைகளின் நிலுவை தொகை ரூ.52.38 கோடி! 50 சதவீதம் விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பு
UPDATED : ஆக 04, 2026 06:30 AM
ADDED : ஆக 03, 2026 04:40 PM

குன்னுார்: நீலகிரியில் 'இன்கோ' தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய, 52.38 கோடி ரூபாய் நிலுவை தொகையில் முதற்கட்டமாக, 50 சதவீதம் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால், அதனை விரைவில் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த, 2015-- -2019 கால கட்டத்திற்கான தேயிலை ஏல ஒப்பீட்டு தரவுகளின்படி, கொல்கத்தா, கவுகாத்தி, சிலிகுரி, கொச்சி, குன்னுார் மற்றும் கோவை உள்ளிட்ட நாட்டின் முக்கிய தேயிலை ஏல மையங்களுடன் ஒப்பிடுகையில், குன்னுார் 'டீசர்வ்' தொடர்ந்து மிக குறைந்த சராசரி ஏல விலை பதிவு செய்துள்ளன.
பொதுவாக, தேயிலை வாரியத்தின் விலை பகிர்வு நிர்ணயம் அடிப்படையின் கீழ், விவசாயிகளுக்கான, மாதாந்திர பசுந்தேயிலை விலையை அறிவிக்கப்படுகிறது. இதே காலகட்டத்தில் பசுந்தேயிலைக்கான நிர்ணய விலையை விட குறைவாக வழங்கி நிலுவை வைத்ததாக, 110 தேயிலை தொழிற்சாலைகளை, 2017-ல் தேயிலை வாரியம் பட்டியலிட்டது. இதை எதிர்த்து, 61 தொழிற்சாலைகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கிற்கான உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது.
50 சதவீத தொகை வழங்க உத்தரவு அதில், 2019 நவ., வரை செலுத்த வேண்டிய வித்தியாச தொகை குறித்து தேயிலை வாரியம் தனித்தனி அறிவிப்புகளை வழங்கவும், உத்தரவு நகல் கிடைத்த, 12 வாரங்களுக்குள் சர்ச்சைக்குரிய தொகையில், 50 சதவீதத்தை விவசாயிகளுக்கு தொழிற்சாலைகள் வழங்கவும் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவுப்படி, தேயிலை வாரியம் கடந்த, 21ல் முதற்கட்டமாக இன்கோ தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பாணைகள் அனுப்பி உள்ளது.
நீலகிரி சிறு தேயிலை விவசாயிகள் விழிப்புணர்வு மைய ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் கூறுகையில்,''கடந்த, 2015 டிச., மாதம் முதல், 2019 நவ., வரையிலான காலத்திற்கு சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மாற்று தொகையை நிர்ணயித்து, இந்த தொகையில், 50 சதவீதத்தை வழங்க கோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 'இன்கோ' தொழிற்சாலைகளுக்கு தேயிலை வாரியம் நிர்ணயித்த மொத்த மாற்று தொகை. 52.38 கோடி ரூபாய்.
அதில், 50 சதவீத தொகை வழங்க வேண்டி உள்ளது. அதிகார பூர்வ தரவுகளின் அடிப்படையில் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளதால், நீலகிரி சிறு தேயிலை விவசாயிகளின் நலன்களை பாதுகாத்தலுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில், இன்கோ சர்வ், டீசர்வ், தேயிலை வாரியம் மற்றும் சிறு தேயிலை விவசாயிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார்.
