/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.80 கோடி புறநகர் சாலை பணியால் போக்குவரத்து நெரிசல் குறையும்! கோடை சீசனில் ஊட்டி நகர பகுதியில் திணறல் இருக்காது
/
ரூ.80 கோடி புறநகர் சாலை பணியால் போக்குவரத்து நெரிசல் குறையும்! கோடை சீசனில் ஊட்டி நகர பகுதியில் திணறல் இருக்காது
ரூ.80 கோடி புறநகர் சாலை பணியால் போக்குவரத்து நெரிசல் குறையும்! கோடை சீசனில் ஊட்டி நகர பகுதியில் திணறல் இருக்காது
ரூ.80 கோடி புறநகர் சாலை பணியால் போக்குவரத்து நெரிசல் குறையும்! கோடை சீசனில் ஊட்டி நகர பகுதியில் திணறல் இருக்காது
ADDED : நவ 22, 2025 04:56 AM

ஊட்டி: ஊட்டியில், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மழை நீர் வடிகால் வசதியுடன், பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது; இப்பணி, நிறைவடையும் பட்சத்தில், 25 சதவீதம் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
ஊட்டி, சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவதால், நாட்டின் பல்வேறு பகுதிகள், வெளிநாடுகளில் இருந்து, ஆண்டுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சீசன் நாட்களில் மட்டுமே, 20 முதல் 22 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் ஊட்டிக்கு வருகின்றன.
தவிர, உள்ளூர் மக்களின் வருகையும் அதிகமாக இருக்கும். இந்நிலையில், ஊட்டியில், போதிய 'பார்க்கிங்' வசதி இல்லாததால், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் நகரில் உள்ள தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்காவுடன், புறநகர் பகுதியில் உள்ள பைக்காரா, 10 வது மைல், பைன்பாரஸ்ட் மற்றும் ஊசிமலை சுற்றுலா மையங்களை காண தவறுவதில்லை. இதனால், சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
ஊட்டி நகர சாலைகளில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, நெடுஞ்சாலை துறை சார்பில், புறநகர் 'பைபாஸ்' சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் வாயிலாக, கோவையில் மற்றும் பிற சமவெளி பகுதிகளில் இருந்து வரும், சுற்றுலா வாகனங்கள் ஊட்டி நகருக்குள் வராமலேயே, புறநகர் வழியாக சென்றுவர வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த பணிக்காக, 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணி நடந்து வருகிறது.
அதன்படி, சமவெளி பகுதிகளில் இருந்து, மேட்டுப்பாளையம் வழியாக வரும் வாகனங்கள், பர்லியார், காட்டேரி, கேத்தி, லவ்டேல், மஞ்சனகொரை, பர்ன்ஹில், காந்தள் சந்திப்பு, பிங்கர் போஸ்ட், கூடலுார் வழியாக கேரளா மாநிலத்திற்கும்; முதுமலை, தெப்பக்காடு வழியாக, கர்நாடக மாநிலத்திற்கு செல்ல முடியும்.
கோடை சீசனில் பெரும் பயன் வரும்
கோடை சீசனுக்குள் இப்பணி நிறைவடையும் பட்சத்தில், 25 சதவீதம் வாகனங்கள், குன்னுார்-- ஊட்டி நகருக்குள் வராமல் புறநகர் பைபாஸ் இந்த சாலையில் சென்று வர முடியும். இதனால், போக்குவரத்து நெரிசல் ஓரளவு தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலை துறை சார்பில் நடக்கும் இந்தப்பணி, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அலுவலர் பிரகாஷ் கூறுகையில், ''ஊட்டி நகருக்கு மாற்று பாதையாக, 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'பன்சிட்டி' முதல், பிங்கர்போஸ்ட் வரை, 10.85 கி.மீ., தொலைவில் இப்பணி நடக்கிறது. அதில், 5 கி.மீ., தொலைவு நகராட்சி சாலையாக உள்ளது.
மீதம், 5.85 கி.மீ., தொலைவு நெடுஞ்சாலை துறை சாலையாக உள்ளது. இந்த சாலையில், மழைநீர் வழிந்தோட ஏதுவாக, 12 இடங்களில் 'பிரிகாஸ்' பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி முழுமை பெற்றால், ஊட்டி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.

