/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகாலையில் தேயிலை தொழிலாளர்களுக்குபாதுகாப்பு கேள்வி குறி:அதிகரித்து வரும் வனவிலங்கு பிரச்னைகள்
/
அதிகாலையில் தேயிலை தொழிலாளர்களுக்குபாதுகாப்பு கேள்வி குறி:அதிகரித்து வரும் வனவிலங்கு பிரச்னைகள்
அதிகாலையில் தேயிலை தொழிலாளர்களுக்குபாதுகாப்பு கேள்வி குறி:அதிகரித்து வரும் வனவிலங்கு பிரச்னைகள்
அதிகாலையில் தேயிலை தொழிலாளர்களுக்குபாதுகாப்பு கேள்வி குறி:அதிகரித்து வரும் வனவிலங்கு பிரச்னைகள்
ADDED : ஜன 29, 2024 11:50 PM
பந்தலுார்;பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்கு தொல்லை அதிகரித்து வரும் சூழலில், அதிகாலை நேரங்களில் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
கூடலுார், பந்தலுார் பகுதிகளில் யானை உட்பட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அதில், பந்தலுார் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில், சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சிறுத்தையின் தொடர் தாக்குதல், கரடி நடமாட்டம் போன்றவை பெரிய அளவிலான பிரச்னைகளை ஏற்படுத்தியது.
வடமாநில தொழிலாளியின் குழந்தை, சிறுத்தை தாக்கி உயிரிழந்த நிலையில், இரண்டு நாட்கள், கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா முழுவதும், சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. பின், பேச்சுவார்த்தை மூலம் அதற்கு தீர்வு காணப்பட்டது. இந்நிலையில், தேயிலை தோட்ட நிர்வாகிகள், தோட்ட தொழிலாளர்களை அதிகாலை நேரத்தில் பணிக்கு வர நிர்பந்தம் செய்வதுடன், மாலை நேரத்தில் காலதாமதமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, வடமாநில தொழிலாளர்கள், வேலைக்கு செல்ல மறுத்தனர். தொடர்ந்து, 'தொழிலாளர்கள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, காலை, 8:00 மணிக்கு பணி வழங்கவும், மாலை, 4:-30 மணிக்கு பணி விடவும் வேண்டும்,' என, அதிகாரிகள் எஸ்டேட் நிர்வாகத்திற்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர்.
கண்டுகொள்ளாத தொழிலாளர் நலத்துறை
சில நாட்களுக்கு பின் மீண்டும், 'காலை, 6:00 மணிக்கு, பெண் தொழிலாளர்கள் வேலைக்கு வர வேண்டும்,' என, நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால், அதிகாலை நேரத்தில் பெண் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலையில் தேயிலை தோட்டத்துக்கு சென்றால் கூடுதல் பணம் கிடைப்பதால், பாதிப்புகளை கண்டு கொள்ளாமல் தொழிலாளர்களும் பணியில் ஈடுபடுகின்றனர்.
தொழிலாளர்கள் நலத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கண்டு கொள்ளாத நிலையில், பாதிப்புகள் ஏற்படும் நேரங்களில், பொதுமக்கள் வருவாய் மற்றும் வனத்துறையினர் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'அரசின் விதிகளை மீறி அதிகாலையில் தொழிலாளர்களை பணி செய்ய நிர்பந்திக்கும் தோட்டங்கள் குறித்து, அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்ய வேண்டும். இப்பகுதியில் வன விலங்கு நடமாட்டம் உள்ளதால், காலை,8:00 மணிக்கு வேலை வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதுரத்துல்லா கூறுகையில், '' குறிப்பிட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு, உரிய இறுதி ஆலோசனை வழங்கப்பட்டு, வேலை நேரம் மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும்,'' என்றார்.