/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை சீசனுக்காக விதை சேகரிப்பு பணி 'விறுவிறு'
/
கோடை சீசனுக்காக விதை சேகரிப்பு பணி 'விறுவிறு'
ADDED : நவ 05, 2025 08:02 PM

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிப்பும், ரோஜா பூங்காவில் புரூனிங் பணியும் நடந்து வருகிறது.
ஊட்டியில் தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்கு, 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த, 5 லட்சம் மலர் செடிகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்படுவது வழக்கம்.
அடுத்தாண்டு மே மாதம் கோடை சீசனை ஒட்டி, தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் உற்பத்தி செய்வதற்காக செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
பணியாளர்கள் காய்ந்த மலர்களில் இருந்து விதைகளை சேகரித்து வருகின்றனர். 'சால்வியா, மேரிகோல்டு, பென்ஸ்டிமன், டெல்பீனியம், ஆஸ்டர், ஜீனியா,' உள்ளிட்ட மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அந்த விதைகளை பணியாளர்கள் தரம் பிரித்து காய வைக்கின்றனர்.
தொடர்ந்து, தரமான விதைகள் நர்சரியில் விதைத்து பராமரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்கள் வளர்ந்த பின்னர் நடைபாதை ஓரங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.
அதேபோல், ரோஜா பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை சீசனின் போது, ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. அதில், 4,201 ரோஜா ரகங்களில், 32,000 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
நடவு செய்யப்பட்ட ரோஜா செடிகளில் புரூனிங் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அடுத்தாண்டு கோடை சீசனுக்கான பணிகளில் தோட்டக்கலை துறையினர் சுறுசுறுப்பாகியுள்ளனர்.
இப்பணிகளை தோட்டக்கலைதுறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

