/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகளின் சாணத்தில் துளிர் விடும் விதைகள்
/
யானைகளின் சாணத்தில் துளிர் விடும் விதைகள்
ADDED : ஏப் 06, 2025 09:33 PM

பந்தலுார்; நீலகிரி மாவட்ட வனப்பகுதியில், யானைகளின் சாணத்தில் துளிர்விடும் விதைகளால் வன வளம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான்கள், சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகைகள் உள்ளன. அதில், கூடலுார் வன கோட்டத்திற்கு உட்பட்ட கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதி வனங்கள் தமிழகம், கேரளா, கர்நாடக வனப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.
இதனால், இந்த பகுதி வனம் மட்டுமின்றி வனத்தை ஒட்டிய தோட்டங்களிலும் வன விலங்குகள் உலா வருகின்றன. எனினும் கோடை காலங்களில் பரவும் காட்டு தீயால் வனப்பகுதி அழிந்து, அடிக்காடுகள் முதல் மரங்கள் மற்றும் அரிய வகை தாவரங்கள், வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
வனம் அழிந்து, வன விலங்குகளும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதில், வனத்தின் பேருயிரான யானைகளை மக்கள் வெறுத்து வருகின்றனர்.
ஆனால், யானை வனத்தின் பரப்பளவை அதிகரிக்கும் முக்கிய பணியை மேற்கொள்கிறது என்பதை மறந்து விடுகின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,'கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் கோடை மழை பெய்துள்ள நிலையில், யானைகள் உணவு கொள்வது, விதைகளையும் உட்கொண்டு அவை சாணத்துடன் நேரடியாக வெளியே வருவதால், அதிலிருந்து விதைகள் துளிர்விட்டு முளைக்க துவங்கி உள்ளது. தொடர், மழை பெய்யும் நிலையில் இந்த துளிர்கள், அரிய வகை தாவரங்களாகவும், மரங்களாகவும் மாறி வனவளம் செழிக்க ஒத்துழைத்து வருகிறது.
எனவே, வனங்களை பாதுகாப்பதுடன், வனத்தை பாதுகாக்கும் வன விலங்குகளையும் பாதுகாக்க மனித சமுதாயம் முன் வர வேண்டியது அவசியம் ஆகும்,'என்றார்.