/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டுமான பொருட்கள் வெளி மார்க்கெட்டில் விற்பனை?
/
கட்டுமான பொருட்கள் வெளி மார்க்கெட்டில் விற்பனை?
ADDED : டிச 13, 2025 08:00 AM
பந்தலுார்: பந்தலுாரில் நுகர்பொருள் வாணிப கிடங்கு கட்ட வைக்கப்பட்ட கட்டுமான பொருட்கள் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு, 4.5 கோடி ரூபாய் செலவில் பந்தலுாரில் கட்டப்பட்டு, 10ம் தேதி திறக்கப்பட்டது. இந்த கட்டடத்தின் உள்ளே ஏறி செல்வதற்கு, படிக்கட்டுகள் அமைக்காமல் இருந்தது.
திறப்பு விழாவிற்கு முக்கிய நிர்வாகிகள் வர இருந்த நிலையில், கடந்த, 9-ம் இரவு அவசரகதியில் படிகள் அமைக்கப்பட்டன. இதனால் திறப்பு விழா அன்று படிகளை பலரும் பயன்படுத்தியதால் அவை இடிந்து விழுந்தது. இதனால், அங்கு வந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், 'அங்கு வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை, வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்ய, மினி லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டு, பந்தலுாரில் இருந்து உப்பட்டி செல்லும் சாலை ஓரத்தில், கொட்டி வைக்கப்பட்டுள்ளன,' என, மாவட்ட கலெக்டருக்கு உள்ளூர் மக்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
பொறியாளர் கர்மல் கூறுகையில்,''கட்டுமான பணி நிறைவு பெற்ற நிலையில், கட்டுமான பொருட்களை இங்கு பணியாற்றிய சிலருக்கு கொடுத்துள்ளேன். அதில் எந்த தவறும் கிடையாது. மேலும், அங்கு படி அமைக்க நிதி ஒதுக்காத நிலையில் அந்தப் பணி முழுமைபெறாமல் விடப் பட்டது,''என்றார்.

