/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்; செரியேரி கிராம மக்கள் முடிவு
/
சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்; செரியேரி கிராம மக்கள் முடிவு
சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்; செரியேரி கிராம மக்கள் முடிவு
சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்; செரியேரி கிராம மக்கள் முடிவு
ADDED : டிச 17, 2024 09:34 PM

பந்தலுார்; 'பந்தலுார் அருகே செரியேரி கிராம சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்,' என, மக்கள் அறிவித்துள்ளனர்.
சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செரியேரி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வயநாடன் செட்டி, பழங்குடியின மக்கள் உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர்.
செரியேரியில் இருந்து நாச்சேரி வழியாக, குடிமேறி மற்றும் கூலால் பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்து உள்ளது. கிராம மக்கள் தங்கள் பட்டா நிலங்களில் இருந்து சாலை அமைக்க தேவையான இடத்தை ஒதுக்கி கொடுத்தனர்.
இங்கு, 2.6 கி.மீ. துாரமுள்ள இந்த மண் சாலையை சீரமைத்து தர வலியுறுத்திய நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சேரங்கோடு ஊராட்சி மூலம் சாலை அளவை செய்யப்பட்டு, 'சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை சாலை சீரமைக்காத நிலையில், வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத சூழலில் மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.
இந்நிலையில், 'சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என, தெரிவித்து, கிராம நுழைவாயில் பகுதியில் பேனர் வைத்தனர். இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வயநாடன் செட்டி சமுதாய தலைவர் வாசுதேவன் கூறுகையில், ''கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி வரும் நிலையில், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், தேர்தல் நேரங்களில் யாரையும் சந்திப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். எனவே, சாலை பணியை முடித்து தர வேண்டும்,'' என்றார். 'இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உடனடி தீர்வு காணப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது.