ADDED : ஜூலை 04, 2026 05:15 AM

ஊட்டி: ஊட்டியில் காய்கறி வரத்து குறைந்ததால், அனைத்து வகையான காய்கறிகளுக்கு விலை உயர்ந்துள்ளது. நீலகிரியில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், பட்டாணி மற்றும் வெள்ளை பூண்டு ஆகிய மலை காய்கறிகளும்; சில இடங்களில் செல்லாரி, சைனீஸ் கேபேஜ், சுக்கினி உட்பட பல்வேறு சைனீஸ் வகை காய்கறிகளும் அதிகளவு பயிரிடப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகள் மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை மற்றும் பெங்களூரு, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மழை பொய்த்ததாலும் பருவ நிலை மாற்றத்தால் உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், புருக்கோலி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது.
நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா முகமது கூறுகையில், '' மழை பொழிவு இல்லாமல் வரத்து குறைந்ததால் நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, உருளைகிழங்கு கிலோ, 50 ரூபாய், கேரட் 45, பீட்ரூட் 60 , புருக்கோலி, 220 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக, 20 டன் அளவுக்கு காய்கறிகள் வரத்து இருக்கும். தற்போது, அதிகபட்சம், 8 டன் அளவுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது,'' என்றார்.
