/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மீண்டும் மதுக்கடை திறக்க சோலுார் மக்கள் எதிர்ப்பு
/
மீண்டும் மதுக்கடை திறக்க சோலுார் மக்கள் எதிர்ப்பு
ADDED : பிப் 17, 2025 10:29 PM

ஊட்டி; சோலுாரில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி அருகே சோலுார் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. சோலுார் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்ட போது, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது.
தொடர்ந்து, மக்கள் எதிர்ப்பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடை மூடப்பட்டது. தற்போது, அதே பகுதியில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை திறக்க சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டுஉள்ளனர்.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, 'மதுக்கடை திறந்தால் போராட்டம் நடத்தப்படும்,' என, சம்மந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஊர் தலைவர் தட்டை என்பவர் தலைமையில் கிராம மக்கள் கலெக்டரை சந்தித்து, டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
ஊர் தலைவர் தட்டை கூறுகையில், ''மக்கள் எதிர்ப்பால் சோலுாரில் இருந்த டாஸ்மாக் மதுக்கடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. மீண்டும் அதே பகுதியில் திறக்க நடவடிக்கை எடுத்திருப்பதால் எதிர்ப்பு தெரிவித்து, கடை வராமல் தடுக்க வேண்டி, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்,'' என்றார்.

