ADDED : ஆக 14, 2026 04:12 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள, விரிசல் காரணமாக, இரு மாநில போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது.
கூடலுாரில் இருந்து தேவர் சோலை, நெலாக்கோட்டை, பாட்டவயல் வழியாக கேரளா மாநிலம் வயநாடு மற்றும் தமிழகத்தின் பந்தலுார் மற்றும் அய்யன்கொல்லி சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையில் நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை பகுதியில், சாலையின் ஒரு பகுதி, தாழ்வான குடியிருப்புகளை ஒட்டிய பகுதியாக உள்ளது. ஆண்டு தோறும் மழையின் போது, இந்த பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலையில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை அவ்வப்போது தற்காலிக தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த, 11-ம் தேதி இரவு பெய்த மழையால், இந்தப் பகுதியில் சாலையோர தடுப்புகள் இடிந்து விழுந்து சாலையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால் மண்ணரிப்பு அதிகரித்து, சாலை முழுமையாக துண்டிக்கப்படும் அபாய நிலையில் உள்ளது. இதனை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதில், சாலையோர மண்ணை எடுத்து சாக்கு பைகளில் நிறைத்து, சாலையோரம் அடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து இதனை ஒட்டிய கீழ் பகுதிகளில், மண்ணரிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், நிரந்தர தடுப்பிற்கு பதில் மண் மூட்டைகளை அடுக்குவதால், மழை பெய்தால் மேலும் பாதிப்பு ஏற்பட்டு, தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படும்.
மக்கள் கூறுகையில்,' சாலையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு மண் மூட்டைகளை மட்டுமே நெடுஞ்சாலைத்துறை நம்பியிருக்காமல், இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தரமான பணிகளை மேற்கொள்ள வோண்டும்,' என்றனர்.
