'ரேபிஸ்' இல்லாத மாவட்டமாக நீலகிரியை மாற்ற நடவடிக்கை
'ரேபிஸ்' இல்லாத மாவட்டமாக நீலகிரியை மாற்ற நடவடிக்கை
ADDED : ஜூன் 14, 2026 03:33 AM

ஊட்டி: ''நீலகிரியை 'ரேபிஸ்' இல்லாத மாவட்டமாக மாற்ற, அரசு செயல்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன,'' என, கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்தார்.
ஊட்டி, செல்லப்பிராணி பூங்காவில், மாணவர்களுக்கு ரேபிஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 'நாய்களுக்கு தடுப்பூசி போடுவது, தத்தெடுப்பது மற்றும் பராமரிப்பு' குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
கலெக்டர் லட்சுமி பவ்யா, நிருபர்களிடம் கூறுகையில், ''சில மாதங்களுக்கு முன், நீலகிரியில் முதல் முறையாக செல்லப்பிராணி பூங்காவை தொடங்கி வைத்தோம். தொடர்ந்து, மாவட்டத்தில், வெறிநாய் நோய் தடுப்பு, நாய்களுடன் பழகும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், குழந்தைகள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
''செல்லப்பிராணி தத்தெடுப்பை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்படுகின்றன. நீலகிரியை ரேபிஸ் இல்லாத பாதுகாப்பான மாவட்டமாக தொடரும் நோக்கத்துடன் பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.
