/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முடிந்தால் நின்று பார்? மக்களை மிரட்டும் பஸ் ஸ்டாப்கள்
/
முடிந்தால் நின்று பார்? மக்களை மிரட்டும் பஸ் ஸ்டாப்கள்
முடிந்தால் நின்று பார்? மக்களை மிரட்டும் பஸ் ஸ்டாப்கள்
முடிந்தால் நின்று பார்? மக்களை மிரட்டும் பஸ் ஸ்டாப்கள்
ADDED : செப் 03, 2025 10:49 PM

நீலகிரி மாவட்டத்தில், 'நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி,' என, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், மாவட்ட முழுவதும், எம்.எல்.ஏ.., எம்.பி., சிறப்பு மலைப் பகுதி உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ், 423 நிழற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள், மழை மற்றும் வெயில் காலங்களில் பயன்படுத்தும் நோக்கத்திற்கு அரசின் சார்பில் பல இடங்களில் நிழற்கூரைகள் கட்டப்பட்டுள்ளன. தவிர தனியார் அமைப்பு, ரோட்டரி சங்கங்கள் சார்பிலும் நிழற்கூரைகள் கட்டி கொடுக்கப்பட்டது. பராமரிப்பு பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், மாவட்டத்தில் நிழற்கூரை பராமரிப்பு பணிகளில் ஏற்பட்ட தொய்வால் இன்றைய நிலையில், 50 சதவீத நிழற்கூரைகள் சீரழிந்து காட்சியளிக்கிறது. இரவு பகல் என்று பாராமல் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மது பிரியர்களின் இருப்பிடமாகவும், சூதாட்டகாரர்களின் புகலிடமாக மாறியுள்ளது.
அதில், 30 சதவீதம் நிழற்கூரைகள் இருக்கைகள் உடைந்து, பெயர்ந்து முட்புதர் சூழ்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் பொதுமக்கள் நிழற்கூரைகளை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளியில் வெயிலிலும், மழையிலும் கால் கடுக்க வெளிப்புறத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நம் மாவட்டத்தில், 6 மாதங்களுக்கு மேல் மழை பெய்து வரும் நிலையில், நிழற்கூரை என்பது அத்தியாவசியமாக உள்ளது. ஆனால், அதன் பராமரிப்பு குறித்து யாரும் கண்டு கொள்வதில்லை.
பந்தலுார் தமிழக -கேரளா எல்லை பகுதியான, பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், பயணிகள் நிழற்கூரை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் பயணிகள் மனம் நொந்து வாகனங் களுக்கு காத்திருக்கும் சூழல் தொடர்கிறது.
பல இடங்களிலும் உடைந்த நிலையில் நிழற்கூரைகள் உள்ளதுடன், பெரும்பாலான இடங்களில் புதர்கள் சூழ்ந்தும் மழை நீர் தேங்கி நின்றும் பயணிகள் உள்ளே நிற்க முடியாத நிலையில் காணப்படுகிறது.
அத்துடன் பொன்னானி, அத்திமாநகர் பகுதிகளில் நிழற்கூரைகள் இடிந்து விழுந்த நிலையில் புதிதாக, நிழற்கூரைகள் அமைத்து தரவில்லை. மக்கள் நாள்தோறும் நனைந்த வண்ணம் வாகனங்களுக்கு காத்திருக்கும் சூழல் உள்ளது.
அத்திக்குன்னா பகுதியில் நிழற்கூரை இடிந்து, பல மாதங்கள் ஆகியும் அதனை அகற்றவோ, புதிதாக அமைக்கவோ நகராட்சி நிர்வாகம் முன் வரவில்லை.
குன்னுார் குன்னுார் லெவல் கிராசிங் பெட்ரோல் பங்க் அருகே, ஊட்டிக்கு செல்லும் பயணிகள் நிழற்கூரை இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இந்த இடத்தில் நிழற்கூரை அமைக்க நகராட்சி எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது சில ஆண்டுகளுக்கு முன்பு, வெலிங்டன் பகுதியில் இருந்த நிழற்கூரைகள் அகற்றப்பட்டன. இரு புறங்களிலும் நிழற்கூரைகள் இல்லாததால், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், முதியோர் என பயணிகள், மழை மற்றும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருப்பதால் அவதிக்குள்ளாகின்றனர். காணிக்க ராஜ் நகரில் உள்ள நிழற்கூரை டீக்கடையாக மாறியுள்ளது.
வண்ணார பேட்டை செல்லும் சாலையில், பிரேத பரிசோதனை அறை மற்றும் முதியோர் பராமரிப்பு மையம், ஓட்டுப்பட்டறை மூணு ரோடு உட்பட பல பகுதிகளில் உள்ள பயணிகள் நிழற்கூரை இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாக மாறுகிறது. அதில் மதுபாட்டில்கள், டம்ளர்கள் குவிந்து துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.
கூடலுார் கூடலுார் பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு நேரடி பஸ் வசதியில்லை. இதனால், வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள்; பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவர்கள்; சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் மக்கள், பஸ்சுக்காக காத்திருக்க வசதியாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம், நிழற்கூரைகள் அமைத்துள்ளனர். இங்குள்ள பெரும்பாலான நிழற்கூரைகள், 20 முதல் 30 ஆண்டுகள் பழமையானவை.
பல நிழற்கூரைகள் பலமிழந்து ஆபத் தான நிலையில் உள்ளது.
அதில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை சில்வர்கிளவுட், மைசூரு தேசிய நெடுஞ்சாலை மார்த்தோமா நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வாகனம் மோதி சேதமடைந்த, நிழற்கூரைகள் இதுவரை சீரமைக்காததால், யாரும் பயன்படுத்துவதில்லை. பழைய பஸ் ஸ்டாண்ட் கோழிக்கோடு சாலை உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் நிழற்கூரை இன்றி,மழை காலத்தில் பயணிகள் சிரமப்பட்டு திறந்த வெளியில் காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர்.
கோத்தகிரி கோத்தகிரி கட்டபெட்டு இடையே, கிருஷ்ணாபுதுார் பகுதியில், பல ஆண்டு களுக்கு முன்பு, பயணியர் நிழற்கூரை அமைக்கப்பட்டது. இந்த நிழற்கூரையை, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், நிழற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் சேதமடைந்துள்ளது.
இதனால், பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. தவிர, அமர முடியாமலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில், இங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், இடையூறு அதிகரித்துள்ளது. இதை தவிர, கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், மடித்தொரை, ஓரசோலை ஓடைகாடு உட்பட பல இடங்களில் நிழற்கூரைகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன.
இத்தகைய நிழற்கூரைகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் ஆய்வு செய்து, சீரமைத்து பராமரித்தால் மட்டுமே குளிர் மாவட்டத்தில் பயணிகள், மாணவர்கள் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கூறுகையில், '' நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்த நிழற் கூரை அமைக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தான் கவனிக்க வேண்டும். பராமரிப்பு இல்லாத நிழற்கூரைகளின் நிலை குறித்து கலெக்டர் பார்வைக்கு எடுத்து சென்று, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் வாயிலாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
-நிருபர் குழு--