தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வெற்றி பயண திட்டம் : தனியார் வாகனங்கள் திண்டாட்டம்!

வெற்றி பயண திட்டம் : தனியார் வாகனங்கள் திண்டாட்டம்!

வெற்றி பயண திட்டம் : தனியார் வாகனங்கள் திண்டாட்டம்!


UPDATED : அக் 13, 2026 06:50 PM

ADDED : அக் 13, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 06:50 PM ADDED : அக் 13, 2026 06:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

–நிருபர் குழு–



மாநில அரசின் வெற்றி பயண திட்டத்தால் அரசு பஸ்களில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து கழகம் மேலும் பாதிப்படைந்துள்ளது.

மறுபுறம், தனியார் மினி பஸ்கள், ஆடோக்கள், சிறிய கிராமங்கள்; புற நகர் பகுதிகளில் உள்ள பெட்டிகடை வியாபாரிகள் பாதிப்படைந்து செய்வதறியாது திணறி வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் விதத்தில், கூடலுார் பகுதியில் ஆட்டோ உரிமையாளர், ஓட்டுனர் சங்கத்தினர் நேற்று முன்தினம் ஒரு நாள் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘இந்த திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்,’ என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

டேனியல், ஆட்டோ ஓட்டுனர், கூடலுார்:



தமிழக அரசு, மகளிர் இலவச பயணத் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அனைத்து பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதித்துள்ளது. இதனால், ஆட்டோ தொழிலில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, எங்கள் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இலவச பயணத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அல்லது அரசு ஆட்டோ ஓட்டுர்களுக்கு, மாதம் ஒருமுறை மானிய உதவி வழங்க வேண்டும்.

சிவசெல்வன், சளிவயல் ஆட்டோ சங்கம், கூடலுார்:



கூடலுார் பகுதியில், தமிழ்நாடு, கேரள அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இதனால், ஆட்டோ உரிமையாளர், ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு இத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இலவச பயண திட்ட பஸ்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

ரமேஷ், ஆட்டோ டிரைவர், குன்னுார் :



கடந்த ஆட்சியில் குறிப்பிட்ட சில பஸ்களில் மட்டும் இலவச பயண திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, பாதிப்பு பெரிதாக தெரியவில்லை. தற்போது அனைத்து பஸ்களிலும் அனுமதிக்கப்படுவதால் ஆட்டோ சவாரிகள் அடியோடு குறைந்துவிட்டது. வாகன கடன் மற்றும் நிதி நிறுவன தவணைகளை செலுத்த முடியாமல் டிரைவர்கள் தவித்து வருகின்றனர். நாள் முழுவதும் உழைத்தும் குடும்ப செலவுகளுக்கு கூட வருமானமின்றி ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலைக்கு உள்ளது. இதனை யாருக்கும் கவலை இல்லை.

வடிவேல், நீலகிரி மினி பஸ் சங்க செயலாளர், கோத்தகிரி:



டீசல் விலை சமவெளி பகுதியை விட நீலகிரியில் ஒரு ரூபாய் கூடுதலாக உள்ளது. பஸ் பராமரிப்புக்கு, மேட்டுப்பாளையம் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், செலவு அதிகம். இந்த சிரமமான நிலையிலும், லாபத்தை கருத்தில் கொள்ளாமல், மக்களுக்கு சேவை செய்ய, மினி பஸ் இயக்கி வருகிறோம். வெற்றி பயண திட்டம் வாயிலாக, கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மினிபஸ்களில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை குறைவு. அரசு எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

மணிகண்டன், பெட்டிக்கடை உரிமையாளர், கோத்தகிரி.



மாநில அரசின் மகளிர் வெற்றி பயணி திட்டம் வரவேற்பதாக இருந்தாலும், வெற்றிலை பாக்கு, கரிவேப்பிலை, மல்லித்தழை வாங்குவதற்காகக கூட, கிராம பெண்கள் பெ ரும்பாலும் அரசு பஸ்களில் இரு மணிநேரம் பயணிக்கின்றனர். இது எங்களை போன்ற சிறு வியாபாரிகளை பாதிக்கிறது. வியாபாரம் மந்தமாக உள்ளது. அரசு இந்த திட்டத்தை பரிசீலித்து, வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும்.

சேகர், வாடகைடாக்சி டிரைவர் கோத்தகிரி:

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வாகன பராமரிப்பு, லைசென்ஸ் மற்றும் எப்.சி., போன்ற செலவினங்கள் அதிகமாக உள்ளது. பல ஆண்டுகளாக டாக்சி ஓட்டியே, குடும்பத்தை பராமரித்து வருகிறோம். இதுவரை, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு வாடகை எடுப்பவர்கள், தற்போது, தங்கள் குடும்ப பெண்களுடன் அரசு பஸ்களில் செல்கின்றனர். இதனால், எங்களுக்கு கடுமையான வருவாய் இழப்பு உள்ளது. மகளிர் வெற்றிப்பயண திட்டத்தை மறு பரிசீலனை செய்வதுடன், பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும்.

செல்வன், ஆட்டோ டிரைவர், கோத்தகிரி:

மகளிர் வெற்றிப் பயணத்தால், நாங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒரு நாளுக்கு, இரண்டு மூன்று சவாரி இருந்தால் கூட, ஓரளவு வருவாய் கிடைக்கும். மகளிர் வெற்றி பயணத்தால், தற்போது சவாரி கெடுப்பது அரிதாகிவிட்டது. இதனால், வீடு வாடகை, குழந்தைகளின் கல்வி உட்பட, குடும்பத்தை பராமரிக்க முடியாத நில உள்ளது. எனவே, அரசு இத்திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

அம்சா, -சமூக ஆர்வலர், சேரம்பாடி.

மலை மாவட்டமான நீலகிரியில் அரசு பஸ்களை, தவிர தனியார் ஜீப்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. இதனால் மக்களின் பயண தேவை ஓரளவு பூர்த்தி பெற்ற நிலையில், கிராமப்புறங்களை மையப்படுத்தி மினி பஸ்களும் இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது, வெற்றி பயண திட்டம் மூலம், பெண்கள் பயனடைந்த போதும், பிறர் டாக்சி வாகனங்கள் மற்றும் மினி பஸ்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், மினி பஸ் மற்றும் ஆட்டோ ஆகியவற்றிற்கான, வரியினங்களை முழுமையாக நீக்க வேண்டும்.

சுரேஷ், -சமூக ஆர்வலர், பந்தலுார்:



அரசின் இலவச பயண திட்டத்தால், கிராமப்புற பெண்கள் நீண்ட துாரம் நடந்து வந்து நெடுஞ்சாலைகளில் நின்று, அரசு பஸ்களில் பயணிக்கின்றனர். இதனால், அரசு கடன் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, ஆட்டோ, ஜீப், மினி பஸ் ஆகியவற்றை வாங்கி இயக்கும் அதன் உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்த பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை தவிர்க்கும் விதமாக மகளிர்க்கு சலுகை கட்டணத்திலும், முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இலவச பயணத்திட்டத்தையும், அரசு பஸ்களில் செயல்படுத்த வேண்டும்.

சரவணன்,மினி பஸ் உரிமையாளர் , குன்னுார் :



குன்னுாரில் ஐந்து நகர பஸ்களும் மகளிருக்காக கடந்த ஆட்சியில் இலவசமாக இயக்கப்பட்டதால் எங்களது தொழில் பாதிப்படைந்தது. தற்போது, 'வெற்றி பயணம்' திட்டத்தின் கீழ் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள அரசு பஸ்களும், நாங்கள் இயக்கும் அதே வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, அருவங்காடு போன்ற வழித்தடங்களில் மினி பஸ்களுக்கு பயணிகள் வரத்து முற்றிலும் குறைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

காளிதாஸ், தனியார் மினி பஸ் மேலாளர்,குன்னுார் :



தற்போது, வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் குன்னுாரில் இருந்து, ஊட்டி செல்லும் வரை மகளிருக்கான 'வெற்றி பயணம்' திட்ட பஸ்களாக இலவசமாக இயக்கப்படுகின்றன. பின்னர் ஊட்டியில் இருந்து சமவெளிப் பகுதிகளுக்கு ‘எக்ஸ்பிரஸ்’ பஸ்களாக இயக்கப்படுகின்றன. ஏற்கனவே, இங்கு மினி பஸ்கள் இழப்பில் இயங்கி வரும் சூழலில், இந்த புதிய நடைமுறையால் மகளிர் மினி பஸ்களில் பயணிப்பதை முறையாக தவிர்த்து வருகின்றனர். அரசு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

சென்னம்மா, ஆட்டோ டிரைவர், ஊட்டி:



அரசின் வெற்றி பயணம் திட்டம் மகளிருக்கு கொண்டு வரப்பட்டது வரவேற்க தக்கது. அதே வேளையில் அன்றாட ஆட்டோ தொழிலை நம்பியுள்ள எங்களை போன்ற பெண்களுக்கு வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதால், சில நேரங்களில் இரு சவாரி கூட கிடைப்பதில்லை. இதனால், குடும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டால் மகிழ்ச்சி.

சின்னப்பராஜ், டாக்சி டிரைவர், ஊட்டி:



சமீப காலமாக டிராவல்ஸ் தொழில் நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . வாகன தொடர்பான அனைத்து வரி இனங்களும் தவறாமல் செலுத்தி வருகிறோம். எரிபொருள் விலை உயர்வு ஒரு பக்கம் பாதிப்படைய செய்துள்ளது. இந்நிலையில், வெற்றி பயணத்திட்டத்தால், டாக்சியில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. எங்களின் வாழ்வாதாரத்திற்கு தீர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us