/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் இ-பாஸ் நடைமுறையில் திடீர் மாற்றம்; ஐந்து இடத்தில் மட்டும் சோதனை
/
ஊட்டியில் இ-பாஸ் நடைமுறையில் திடீர் மாற்றம்; ஐந்து இடத்தில் மட்டும் சோதனை
ஊட்டியில் இ-பாஸ் நடைமுறையில் திடீர் மாற்றம்; ஐந்து இடத்தில் மட்டும் சோதனை
ஊட்டியில் இ-பாஸ் நடைமுறையில் திடீர் மாற்றம்; ஐந்து இடத்தில் மட்டும் சோதனை
ADDED : ஏப் 22, 2025 07:15 AM
ஊட்டி; 'நீலகிரி மாவட்டத்தில், ஐந்து சோதனை சாவடிகளில் மட்டும் இ--பாஸ் பரிசோதனை பணி நடக்கும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாக, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, கடந்த ஆண்டு மே, 7ம் தேதி முதல், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, டி.என்.43., பதிவு கொண்ட உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா வாகனங்களுக்கும் இ--பாஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 'இம்மாதம், 1ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி வரை வாரத்தில், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு, 6,000 சுற்றுலா வாகனங்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், 8,000 சுற்றுலா வாகனங்கள் மட்டும் நீலகிரிக்கு அனுமதிக்க வேண்டும்,' என, சென்னை ஐகோர்ட் கட்டுப்பாட்டை விதித்தது. நீலகிரி எல்லையில், 11 சோதனை சாவடிகளில் இ--பாஸ் சோதனை மேற்கொண்டு சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
இதனால், வாகன நெரிசல் ஏற்பட்டு, தமிழக- கேரள எல்லையில், கர்நாடகா, கேரளா செல்லும் வாகனங்களும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோதனை சாவடிகள் குறைப்பு
நேற்று மாவட்ட கலெக்டர் லட்சுமிபவ்யா வெளியிட்ட அறிக்கையில், '22ம் தேதி (இன்று) முதல் கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, மேல் கூடலுார் கெத்தை ஆகிய நுழைவு வாயில்களில் மட்டும் இ--பாஸ் சோதனை பணி நடக்கும்,' என, கூறப்பட்டுள்ளது. இதனால், மாநில எல்லையில், நாடுகாணி; கக்கனல்லா வழியாக, கேரளா, கர்நாடக செல்லும் வாகனங்கள் தாமதமின்றி செல்லவும், வாகன நெரிசல் குறையவும் வழி ஏற்பட்டுள்ளது.