/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.664.09 கோடியில் தேயிலை மேம்பாடு திட்டம்; குன்னுாரில் வாரிய செயல் இயக்குனர் தகவல்
/
ரூ.664.09 கோடியில் தேயிலை மேம்பாடு திட்டம்; குன்னுாரில் வாரிய செயல் இயக்குனர் தகவல்
ரூ.664.09 கோடியில் தேயிலை மேம்பாடு திட்டம்; குன்னுாரில் வாரிய செயல் இயக்குனர் தகவல்
ரூ.664.09 கோடியில் தேயிலை மேம்பாடு திட்டம்; குன்னுாரில் வாரிய செயல் இயக்குனர் தகவல்
ADDED : அக் 10, 2024 11:55 PM

குன்னுார் : குன்னுாரில் உள்ள தேயிலை வாரிய அலுவலகத்தில், தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு திட்ட சிறப்பு கூட்டம் நடந்தது.
இதற்கு தலைமை வகித்த தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் பேசியதாவது:
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வணிக துறை சார்பில் தேயிலை வாரியத்தின் மூலம், தேயிலை மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு திட்டம், 664.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதில், தரமான தேயிலை சாகுபடி மற்றும் மரபு வழி சாகுபடி முறையை உறுதி செய்ய, தனிப்பட்ட தொழில் முனைவோர், சுயஉதவி குழு, உற்பத்தியாளர் சங்கம், சிறு தேயிலை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவற்றிற்கு, மானியம் மற்றும் நிதியுதவி வழங்குகிறது.
மறு நாற்று பணிக்கு மானியம்
தேயிலை நாற்று நடவுக்கு ஒரு தேயிலை செடிக்கு, 5 ரூபாய் மானியம் வழங்கப்படும். 'ஆர்த்தோடக்ஸ் மற்றும் கிரீன் டீ' உற்பத்தி செய்யும், எஸ்டேட் தேயிலை தோட்டங்களுக்கு தேயிலை மறு நடவு செய்ய மானியமாக ஒரு எக்டருக்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். குறிப்பிட்ட தேயிலை ரக உற்பத்திக்கு, சுழல் நிதியாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்குவதுடன், விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க வழிவகுக்கப்படும்.
50க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளை கொண்ட சிறு விவசாய சங்கங்கள், சிறு விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம், இலை சேமிப்பு மையங்களுக்கு சுழல் நிதியாக, 3 லட்சம் ரூபாய் வழங்குவதுடன், பசுந்தேயிலை கொண்டு செல்ல வாகனங்கள், கம்ப்யூட்டர் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி உதவி தொகை
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த தனிப்பட்ட சிறு தேயிலை விவசாயிகளுக்கு, சுய உதவிக்குழுக்களுக்கு சலுகைகளுக்கு இணையான குறிப்பிட்ட நிதி உதவி வழங்கப்படும். சிறு விவசாயிகள் தேயிலை துாள் உற்பத்தி தயாரிப்பை அதிகரிக்க, ஆர்த்தோடக்ஸ், கிரீன்டீ, சிறப்பு தேயிலை தயாரிப்புக்கு சிறிய தொழிற்சாலை அமைக்க திட்ட செலவில், 40 சதவீதம் வரை நிதியுதவி வழங்கப்படும். பசுந்தேயிலையின் தரம், தரமான கொழுந்து எடுத்தல் போன்றவற்றுக்கு எக்டருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.
சிறு தேயிலை விவசாயிகள், எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. தகுதியுடைய மாணவர்களுக்கு பள்ளி கட்டணங்கள் மற்றும் விடுதி கட்டணங்களில் மூன்றில் இரண்டு பங்கு அளிக்கப்படும்.
அதிகபட்சமாக, 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு, பிளஸ்-2 பொது தேர்வுகளில் சிறந்து விளங்கும் சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு, நிதி உதவியாக, 8,000 மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
புற்றுநோய், சிறுநீரகம், இதயம் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்ற குறைபாடுகள் அல்லது தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர் குடும்ப உறுப்பினர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் https://serviceonline.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே வரும், 15ம் தேதியில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் பேசினார்.
தேயிலை வாரிய துணை தலைவர் ராஜேஷ் சந்தர் முன்னிலை வகித்தார். துணை இயக்குனர் பால்குனி பானர்ஜி, உறுப்பினர் மனோஜ் குமார் மற்றும் தேயிலை விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் பங்கேற்றனர்.