/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை துாள் உற்பத்தி 8.8 கோடி கிலோ சரிவு
/
தேயிலை துாள் உற்பத்தி 8.8 கோடி கிலோ சரிவு
ADDED : நவ 03, 2024 02:57 AM

குன்னுார்:கோல்கட்டாவை தலைமையிடமாகக் கொண்ட இந்திய தேயிலை வாரியம், நீலகிரி மாவட்டம், குன்னுாரிலும் செயல்பட்டு வருகிறது.
இந்திய தேயிலை வாரிய புள்ளி விபரத்தின் படி, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேயிலை துாள் உற்பத்தி குறைந்துள்ளது. நம் நாட்டில், கடந்த ஆண்டில் ஜன., முதல் ஆக., வரை, 82.25 கோடி கிலோ தேயிலை துாள் உற்பத்தியானது.
இதே, நடப்பாண்டு 8 மாதங்களில், 73.45 கோடி கிலோ தேயிலை துாள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 8.8 கோடி கிலோ உற்பத்தி குறைந்துள்ளது.
அதில், வட மாநிலங்களில், கடந்த ஆண்டு, 66.86 கோடி கிலோவாக இருந்த உற்பத்தி, இந்த ஆண்டில், 59.31 கோடி கிலோவாக குறைந்து, 7.55 கோடி கிலோ உற்பத்தி சரிந்தது.
தென்மாநிலங்களில், கடந்த ஆண்டு, 15.38 கோடி கிலோ என இருந்த உற்பத்தி, நடப்பாண்டு, 14.14 கோடி கிலோவாக குறைந்தது; 1.24 கோடி கிலோ உற்பத்தி சரிவைக் கண்டது.
தமிழகத்தில், கடந்த ஆண்டு, 10.80 கோடி கிலோ உற்பத்தி இருந்த நிலையில், நடப்பாண்டு, 10.02 கோடி கிலோவாக குறைந்தது. தமிழகத்தில் உற்பத்தி சரிவு 78 லட்சம் கிலோவாகும்.
உற்பத்தி குறைந்ததால், தேவை அதிகரித்து, விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது. அசாம் போன்ற வடமாநிலங்களில் கனமழை, வெயில் இல்லாதது போன்ற பருவநிலை மாற்றமே தேயிலை உற்பத்தி சரிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.