/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு; போராட்டம் ஒத்திவைப்பு
/
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு; போராட்டம் ஒத்திவைப்பு
ADDED : ஏப் 04, 2025 10:45 PM

கோத்தகிரி; கோத்தகிரி அரவேனு சக்தி விநாயகர் கோவில் மற்றும் சிவாலயம் இடம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக நடக்க இருந்த கவன ஈர்ப்பு போராட்டம், காவல்துறை கேட்டு கொண்டதற்கு இணங்க, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக, தனியார் சிலர் கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். 'இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என, ஆன்மிகத்தில் அக்கறை கொண்டவர்கள் மற்றும் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பலமுறை நில அளவை செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் உறுதி செய்த பின்பும், அகற்றுப்படாமல் உள்ளது. பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், அதிருப்தி அடைந்த மக்கள், படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன் தலைமையில், கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த ஆயத்தமாயினர்.
கோத்தகிரி தாசில்தார் ராஜலட்சுமி முன்னிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், '15 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில், மீண்டும் போராட்டம் நடத்தப்படும்,' என, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊர் பிரமுகர்கள் சீராளன், ஆலா கவுடர், அஜ்ஜன், சிவாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

