/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
/
முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
ADDED : பிப் 11, 2025 11:24 PM
ஊட்டி; நீலகிரியில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத்தை ஒட்டி நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பவுர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் ஒன்று கூடும் நாளில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. 'அதுவும் நடப்பாண்டு முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை வருவது கூடுதல் சிறப்பு,' என கருதப்படுகிறது.
கோவில்களில் திரளான பக்தர்கள்
ஊட்டியில் எல்க்ஹில் முருகன் கோவில், காந்தள் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி, சிறப்பு வேள்வி, முருக பெருமானுக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில் காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை, 11:00 மணிக்கு முருக பெருமானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட, 12 வகையான அபிேஷகம் நடந்தது. பின், கோவில் வளாகத்தில், 108 பால் குடம் ஊர்வலம் நடந்தது.
மேலும், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரை மேற்கொண்டு முருகனிடம் பிரார்த்தனை நடத்தினர்.
கோத்தகிரி சக்தி மலையில் வெற்றிவேல் முருகன் கோவிலில், காலை, 5:00 மணிக்கு, சுப்பிரமணிய மூலமந்திர மாலா மந்திர ஹோமம், 7:00 மணிக்கு மகா அபிஷேகம், 10:00 மணிக்கு மங்கள தீபாராதனை, 11:00 மணிக்கு, சக்கத்தா பஜனை குழுவினர் மற்றும் செல்வி கிருஷ்ணவேணி ஆகியோரின், சிறப்பு பக்தி இன்னிசை நிகழ்ச்சி இடம்பெற்றது.
விழாவுக்கு, சிறப்பு அழைப்பாளராக அவினாசி ஆதினம் தவத்திரு காமாட்சி தாசர் சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சக்தி சேவா சங்க தலைவர் போஜராஜன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல, காத்துக்குளி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அலங்கரிக்கப்பட்ட ஐயனுக்கு, மலர் அலங்கார அபிஷேக பூஜை நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.
மாலை, 4:00 மணிக்கு, பக்தர்களின் காவடி நடனம் இடம்பெற்றது. பஜனை, ஆடல், பாடல் இடம் பெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பந்தலுார் அருகே உப்பட்டி அருள்மிகு செந்துார் முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், ஆராதனை பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, பொன்னானி ஆற்றங்கரையில் இருந்து, பால் காவடி, பறவைக்காவடி, அழகு காவடி, சுற்றுக்காவடி, பால்குடம், நீர் குடம் எடுத்து, தாரை- தப்பட்டை முழங்க, 3- கி.மீ., ஊர்வலம் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து செந்துார் முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு உற்சவமூர்த்தி திருத்தேர் ஊர்வலம் நடத்தப்பட்டது.
குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று நடந்த தைப்பூச திருவிழாவில், ராஜ அலங்காரத்தில் முருகர் அருள்பாலித்தார். முன்னதாக, பன்னீர், பால், தயிர் என அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி கோவிலை வலம் வந்தார். இதே போல, சரவணமலை முருகன், வெலிங்டன் பால சுப்ரமணிய சுவாமி கோவில், பேரக்ஸ் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
கூடலுார் குசுமகிரி குமரமுருகன் கோவில்,60ம் ஆண்டு தைப்பூச தேர்திருவிழா விழாவில், அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. 9:00 மணிக்கு சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், 10:00 சிறப்பு அலங்கார பூஜையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை திருத்தேர் ஊர்வலம் நடந்தது. இதேபோல, ஓவேலி, கிளன்வன்ஸ் சந்தனமலை முருகன் கோவில், ஆமைக்குளம் முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை தரிசனம் செய்தனர்.