/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கலை நய பொருளாக மாறும் கொட்டாங்குச்சி
/
கலை நய பொருளாக மாறும் கொட்டாங்குச்சி
ADDED : ஜன 29, 2025 08:28 PM

பந்தலுார்; பந்தலுாரில் துாக்கி எறியப்படும் கொட்டாங்குச்சிகளில், கலைநயம் மிக்க பொருட்களை கிராம பெண்கள் உருவாக்கி வருகின்றனர்.
பந்தலுார் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதி பெண்களுக்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாத நிலையில், பெரும்பாலான பெண்கள், கேரளா மாநிலத்தில் வீட்டு வேலைகளுக்காக செல்கின்றனர். இவர்கள் சுய தொழில் செய்து முன்னேற்றம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பந்தலுார் அருகே உப்பட்டி பகுதி பெண்களுக்கு, சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், மத்திய அரசின் ஆதரவுடன், 2-மாத பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
அதில், மரம் சாரா பொருட்களில் இருந்து கலை நயமிக்க பொருட்களை தயாரிக்கும் வகையில், கொட்டாங்குச்சிகளில் அழகிய பொருட்களை வடிவமைப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டு, பலரும் பல பொருட்களை உருவாக்கி வருகின்றனர்.
இதற்காக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து, கொட்டாங்குச்சிகள் கொண்டுவரப்பட்டு அவை, சுத்தம் செய்து பல்வேறு கலை பொருட்களாக மாற்றப்படுகின்றன.
இந்த பயிற்சியை கள அலுவலர் குமாரவேலு, ரோட்டரி கிளப் தலைவர் ராபர்ட் ஆகியோர் மேற்பார்வையில், பயிற்சியாளர்கள் சுலோச்சனா, ஹரிதா, ரமணி ஆகியோர் வழங்குகின்றனர்.
கள அலுவலர் குமாரவேலு கூறுகையில், ''இந்த பகுதி தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் மற்றும் பழங்குடியின கிராமங்களில் உள்ளடக்கி உள்ளது. இதனால், பெண்கள் சுய வேலைவாய்ப்பில் ஆர்வம் காட்ட முடியாமல் உள்ளதால், வீசி எறியும் கொட்டாங்குச்சிகள் மூலம் சிறு தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில், இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சியின் முடிவில், மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், பெண்கள் குழுவாக இணைந்து வங்கி கடன் பெற்று சுய தொழில் செய்து பொருளாதார ரீதியாக முன்னேற முடியும். தற்போது பெண்கள் உருவாக்கிய பொருட்களுக்கு வியாபாரிகள் மத்தியில் கிராக்கி ஏற்பட்டு வருகிறது,''என்றார்.

