/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசபக்தி பாடல்கள் இசைத்து ராணுவ இசைக்குழு அசத்தல்
/
தேசபக்தி பாடல்கள் இசைத்து ராணுவ இசைக்குழு அசத்தல்
ADDED : ஆக 17, 2025 09:30 PM
குன்னுார்; ஆப்ரேஷன் சிந்துார் வெற்றியை போற்றும் வகையில், குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில், தேசப்பற்று பாடல்களை இசை கருவிகளில் வாசித்தும், பாடல்கள் பாடியும் ராணுவ வீரர்கள் அசத்தினர்.
குன்னுார், வெலிங்டன், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், அக்னி வீரர் களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு உள்ள ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்திய இசை குழுவில் சிறந்து விளங்கி, 2023ல் தேசிய அளவில் டில்லியில் நடந்த அணி வகுப்பில், 2ம் இடம் பிடித்தனர்.
இத்தகைய சிறப்பு பெற்ற இந்த ராணுவ இசை குழுவினரின் சார்பில், ஆப்ரேஷன் சிந்துார் வெற்றியை பறைசாற்றும் வகையில், வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் பிரம்மாண்ட ராணுவ இசை நிகழ்ச்சி நடந்தது.
ராணுவத்தின் வளமான இசை பாரம்பரியம், வீரம் மற்றும் நமது நாட்டு குடிமக்களுடன் நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் வாழ்க பாரதம், வந்தே பாரதம், ஜெய்ஹிந்த், உட்பட, 12 தேசப் பற்று பாடல்களை பாடி, இசைத்து அசத்தினர்.
அதில், சுபேதார் ரவிகுமார் தலைமையிலான ராணுவ பேண்ட் இசை குழுவினர், பேக் பைப்பர், டிராம்போன் இசை கருவிகளில் இசைத்தது அனைவரையும் கவர்ந்தது.
லான்ஸ் நாயக் சுனில் மற்றும் மாணவி வைஷ்ணவி, மாணவர் வர்ஷித் ஆகியோர் ராணுவ பேண்ட் இசைக்கு ஏற்ப, பாடிய தேச பக்தி பாடல்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. குளிர், சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பங்கேற்றனர்.