/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏப்., 6ல் முதல்வரால் திறக்கப்படும் புதிய மருத்துவ கல்லுாரிக்கு தேவைகள் அதிகம்! அடிப்படை பணிகள் பூர்த்தியானால் சிகிச்சைகள் எளிதாகும்
/
ஏப்., 6ல் முதல்வரால் திறக்கப்படும் புதிய மருத்துவ கல்லுாரிக்கு தேவைகள் அதிகம்! அடிப்படை பணிகள் பூர்த்தியானால் சிகிச்சைகள் எளிதாகும்
ஏப்., 6ல் முதல்வரால் திறக்கப்படும் புதிய மருத்துவ கல்லுாரிக்கு தேவைகள் அதிகம்! அடிப்படை பணிகள் பூர்த்தியானால் சிகிச்சைகள் எளிதாகும்
ஏப்., 6ல் முதல்வரால் திறக்கப்படும் புதிய மருத்துவ கல்லுாரிக்கு தேவைகள் அதிகம்! அடிப்படை பணிகள் பூர்த்தியானால் சிகிச்சைகள் எளிதாகும்
ADDED : மார் 25, 2025 11:10 PM

ஊட்டி: ஊட்டியில் ஏப்., 6ம் தேதி முதல்வரால் திறக்கப்படும் புதிய மருத்துவமனைக்கான அடிப்படை தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டியில் உயர்தர மருத்துவ வசதி இல்லாததால் இங்குள்ள மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கோவை மற்றும் கேரளாவுக்கு சென்று வந்தனர்.
இதற்கு தீர்வாக, 'ஊட்டியில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைக்க வேண்டும்,' என,40 ஆண்டுகளாக மலைமாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மக்களின் கனவு நனவாகும் வகையில், மத்திய, மாநில அரசு பங்களிப்புடன், 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தொடர்நது, ஊட்டி அருகே கால்ப் கிளப், பட்பயர் பகுதியில் 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிகள் முடிவடைந்து, மருத்துவ கல்லுாரியில் மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பணியில் காலதாமதம்
ஊட்டியில் நிலவி வந்த காலநிலை மாற்றத்தால் புதிய மருத்துவமனைக்கான கட்டுமான பணி தாமதமானது. மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. தொடர்ந்து, துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டனர். இதன் காரணமாக, கடந்த ஓராண்டாக கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்தது. தற்போது கட்டுமான பணிகள் முழுமை பெற்று அடுத்த மாதம், 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இதனை திறந்து வைக்கிறார். திறப்பு விழாவை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் மருத்துவமனையில் வார்டு வாரியாக சிகிச்சை பிரிவுகளை ஆய்வு செய்தனர்.
அவசர தேவைகள் என்ன?
இந்நிலையில், புதிய மருத்துவ கல்லுாரில் அமைந்துள்ள இடம் ஊட்டியிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் கால்ப்கிளப் பகுதியில் அமைந்துள்ளது. தொலை துாரத்திலிருந்து வரும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல போதிய டவுன் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு டீன், டாக்டர்கள், பேராசிரியர்கள். உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் என குறைந்தது, 415 பேர் பணியில் இருக்க வேண்டும். தற்போது, 269 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். பிற பணிகளுக்கு உடனடியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும்; மருத்துவமனை, ஊழியர்கள் குடியிருப்பு, மருத்துவ கல்லுாரி என, நாள்தோறும், 10 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டது.
அதில், 3 லட்சம் லிட்டர் தண்ணீர் நகராட்சி உதவியுடன் காமராஜர் சாகர் அணையிலிருந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இன்றும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தண்ணீர் தேவை முக்கியம் என்பதால் அதை திறம்பட கையாள வேண்டும்.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறுகையில், '' இங்கு தற்போது, டாக்டர்கள் உட்பட, 269 பேர் பணியில் உள்ளனர். மீதமுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தண்ணீர் தேவை உட்பட அடிப்படை தேவைகள் குறித்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிறைவேற்றப்படும்,'' என்றார்.