/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திறப்பு விழா காணாமல் புதர் சூழ்ந்துள்ள பூங்கா.. மக்கள் அதிருப்தி! மக்களின் வரி பணம் ரூ. 91 லட்சம் வீண்தானா...?
/
திறப்பு விழா காணாமல் புதர் சூழ்ந்துள்ள பூங்கா.. மக்கள் அதிருப்தி! மக்களின் வரி பணம் ரூ. 91 லட்சம் வீண்தானா...?
திறப்பு விழா காணாமல் புதர் சூழ்ந்துள்ள பூங்கா.. மக்கள் அதிருப்தி! மக்களின் வரி பணம் ரூ. 91 லட்சம் வீண்தானா...?
திறப்பு விழா காணாமல் புதர் சூழ்ந்துள்ள பூங்கா.. மக்கள் அதிருப்தி! மக்களின் வரி பணம் ரூ. 91 லட்சம் வீண்தானா...?
ADDED : டிச 23, 2024 10:34 PM

பந்தலுார்; பந்தலுாரில், 91 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பூங்கா புதராக மாறி வருவதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பந்தலுார் பஜாரில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மேலும், இப்பகுதி வழியாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வாகனங்கள் வந்து செல்கின்றன. எனினும், பஜார் பகுதிக்கு வந்து செல்லும் மக்கள் மற்றும் இங்கு குடியிருப்பவர்கள் ஓய்வு நேரத்தை செலவிட, இடமில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
பூங்கா அமைக்கும் பணி
-இந்நிலையில், நெல்லியாளம் நகராட்சி சார்பில், அரசு மேல்நிலைப்பள்ளி பின்பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தை கடந்த மார்ச் மாதம், 91 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்காவாக மாற்றும் பணி நடந்தது. அதில், சுற்றுச்சுவர், நடைபாதை, குடிநீர் குழாய்கள், ஐந்து இடங்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவு பெற்றன.
ஆனால், இப்பகுதியில் உள்ள புதர் செடிகள் அகற்றப்பட்டு, கழிவு நீர் வழிந்தோட வழி ஏற்படுத்தாத நிலையில், பூங்கா முழுவதும் புதர்கள் சூழ்ந்து, கழிவுநீர் நிறைந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
மக்கள் வரிப்பணத்தில், 91 லட்சம் ரூபாய் செலவு செய்தும், யாருக்கும் பயன் இல்லாமல் காணப்படுகிறது. நகராட்சி அலுவலகம் செல்லும் சாலை ஓரம் உள்ள இந்த பூங்காவின் நிலை குறித்து, அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு ஏற்படும் அபாயம்
விடுமுறை நாட்களில், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் மாலை நேரங்களில் இங்குள்ள ஊஞ்சலில் விளையாடி வரும் நிலையில், இங்குள்ள புதர்களில் அதிக அளவில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளதால், ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
-மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில், 91 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது குறித்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இங்குள்ள நிலையை பார்த்தால் நிதி முழுமையாக செலவிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
நெல்லியாளம் நகராட்சி கமிஷனர் முனியப்பன் கூறுகையில், ''பூங்கா திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பூங்கா அமைத்தது குறித்த விபரங்கள் அடங்கிய கல்வெட்டுகள் வர வேண்டி உள்ளதால், அவை வந்தவுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு விழா நடத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும்,'' என்றார்.