/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி தேயிலைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கலப்பட அபாயம்! அதிரடி நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
/
நீலகிரி தேயிலைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கலப்பட அபாயம்! அதிரடி நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
நீலகிரி தேயிலைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கலப்பட அபாயம்! அதிரடி நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
நீலகிரி தேயிலைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கலப்பட அபாயம்! அதிரடி நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
ADDED : பிப் 12, 2025 11:02 PM

குன்னுார்: 'நீலகிரியின் தரமான தேயிலைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், கலப்பட மோசடியில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பறிக்கும் பசுந்தேயிலையை, 285 தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றனர். மேலும், எஸ்டேட் நிறுவனங்கள் சார்பிலும் துாள் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரியின் காலநிலையில் தரமான தேயிலை துாள் தயாரித்து வருவதால், சர்வதேச அளவில் சிறப்பு பெற்று நல்ல விலையும் கிடைத்து வருகிறது.
அதே சமயம், உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் தேயிலை துாளில் பல இடங்களில் கலப்படம் செய்யப்பட்டு வருவதால், நீலகிரியின் தேயிலையின் தரம் குறைந்து விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது.
இது குறித்து புகார்களை அடுத்து, குன்னுாரில் உள்ள தேயிலை வாரியம், ஏற்கனவே தொடர்ந்து கண்காணித்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, கோத்தகிரி குஞ்சப்பனை சோதனை சாவடி, சோலுார், கோவை உள்ளிட்ட பல இடங்களில் டன் கணக்கில் கலப்பட தேயிலை பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்நிலையில், நீலகிரி மட்டுமின்றி சமவெளி பகுதிகளிலும், சாயம் கலந்த கலப்பட தேயிலை துாளின் புழக்கம் மற்றும் பயன்பாடு, மீண்டும் அதிகரித்து வருவதாக புகார்கள் உள்ளன. 'சாயம்; கலப்பட தேயிலையால் அதிக லாபம் ஈட்டலாம்,' என்ற நோக்கில் சில கடைகாரர்களும் இத்தகைய தேயிலை துாளை வாங்குவதாக, உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். 'கலப்பட தேயிலை உபயோகிப்பது உடல்நலத்திற்கு மிகவும் தீங்கு ஏற்படுத்தும்,' எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இத்தனை வகை கலப்படமா...?
தேநீர் கலப்படம் குறித்து, தேயிலை வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில், தேயிலை துாளில் கலப்படம் செய்யப்படும் பொருட்கள் குறித்து வெளியான தகவல்கள்:
தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்க இலவம் பஞ்சு காயை பறித்து, காயவைத்து அரைத்து தேயிலை துாளுடன் கலப்பது ; முந்திரி கொட்டை பழமாகும் முன்னர் அதன் தோலை காய வைத்து பொடியாக்கி கலப்பது; நிறத்தை கூட்ட, 'சோடியம் கார்பனேட்' ரசாயனத்தை சேர்ப்பது; புளியங்கொட்டையை வறுத்து, தண்ணீர் சேர்த்து காய வைத்து சேர்ப்பது; டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலை துாளை சேகரித்து, கலப்படம் செய்வது மீண்டும் விற்பது; உளுந்து தோல், நிறம் கூட்டப்பட்ட காய்ந்த இலை, பருப்பின் தவிடு, கேசரி பவுடர் போன்றவற்றின் கலவையை தேயிலை துாளில் சேர்ப்பது,' போன்ற தகவல்கள் வெளியாகின.
உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டல் குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,''நீலகிரி டீ குடிப்பதால் புத்துணர்வு கிடைக்கும், மன அழுத்தம் குறையும். ஜீரண சக்தி கொடுக்கும். அதேவேளையில், தேயிலை கலப்படத்தால் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும்.
உணவு பாதுகாப்பு துறை கலப்பட தடுப்பு துறை; தேயிலை வாரியம்; உணவு பாதுகாப்பு துறையினர் சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டு இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீலகிரியில் கோடை சீசன் துவங்கும் நிலையில், சில தேயிலை துாள் வியாபாரிகள் அதிக லாப நோக்கத்தில் கலப்படத்தில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன. இதனை தடுக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்தகுமார் கூறுகையில்,''நீலகிரி தேயிலையின் தரத்தை கெடுக்கும் வகையில் கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் குறித்த கண்காணிப்பு தொடர்ந்து நடக்கிறது. மோசடி செய்பவர்கள் குறித்து தகவல் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.