/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இருந்ததே ஒற்றையடி பாதை; அதுவும் இப்ப...
/
இருந்ததே ஒற்றையடி பாதை; அதுவும் இப்ப...
ADDED : ஆக 07, 2025 07:44 PM

பந்தலுார்:
நெல்லியாளம் நகராட்சி மற்றும் சேரங்கோடு ஊராட்சியின் எல்லை பகுதியில், கிராமங்களின் வளர்ச்சி குறித்து கண்டு கொள்ளாதது மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
பந்தலுார் அருகே நெல்லியாளம் நகராட்சியின், 3-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொன்னானி மற்றும் கருங்காலி பகுதிகள் அமைந்துள்ளன. அதேபோல், சேரங்கோடு ஊராட்சியின், 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குன்றில்கடவு, பந்தபிலா பகுதிகள் அமைந்துள்ளன.
இரண்டு உள்ளாட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்த கிராமங்களுக்கு, பொன்னானி பகுதியில் இருந்து செல்வதற்கு ஒற்றையடி நடைபாதை பயன்படுத்தப்பட்டு வந்தது.
கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, 'நாங்கள் வெற்றி பெற்றால் சிமென்ட் சாலை அமைத்து தருவோம்,' என, அரசியல்வாதிகள் வாக்குறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து இங்குள்ள சிறு விவசாயிகள், சாலை அமைக்க தேவையான இடத்தை இலவசமாக வழங்கி, தாங்களாக இணைந்து ஒற்றையடி நடைபாதையை மண் சாலையாக மாற்றம் செய்தனர். ஆனால், வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அதன் பின்னர், இந்த பகுதிகளை திரும்பி கூட பார்க்கவில்லை. அதில், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட, 3-வது வார்டு, நகர மன்ற தலைவர் சிவகாமி வசிக்கும் பகுதியாகும். இப்பகுதியில் பாதி துாரம் மட்டும் சிமென்ட் சாலையாக மாற்றம் செய்யப்பட்டு, மீதமுள்ள பகுதி சேரும் சகதியுமான சாலையாக மக்கள் சிரமப்பட்டு பயன்படுத்தி வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறு பாலம் மற்றும் அமைக்கப்பட்டு சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் முன் வரவில்லை. சாலைகளை சீரமைக்காமல் விட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள், மழை காலங்களில் சிரமப்பட்டு நடப்பதுடன், தங்கள் விவசாய விலை பொருட்கள் மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை, பழங்காலத்தை போல் தலை சுமையாக சுமந்து செல்லும் அவலம் தொடர்கிறது.
சாலையை சீரமைத்து, வாகனங்கள் சென்றுவர ஏதுவாக மாற்றி தர இப்பகுதி மக்கள் நகராட்சி மற்றும் ஊராட்சியிடம் மனுக்கள் கொடுத்தும் தீர்வு கிடைக்காததால் நொந்துபோய் உள்ளனர்.
எனவே, நெல்லியாளம் நகராட்சி மற்றும் சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து செவிமடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.