/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: பந்தலூர் 'டியூஸ்' மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: பந்தலூர் 'டியூஸ்' மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: பந்தலூர் 'டியூஸ்' மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: பந்தலூர் 'டியூஸ்' மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜன 04, 2024 11:06 PM

பந்தலுார்:'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற, வினாடி-வினா போட்டியில் மாணவர்கள் உடனுக்குடன் பதில் அளித்து அசத்தினர்.
தமிழகம் மற்றும் புதுவை பள்ளி மாணவர்கள், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' விற்கு நேரில் செல்லும் வாய்ப்பை வழங்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி-வினா போட்டி கடந்த, 2018 முதல் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான போட்டி, இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 150 பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளை, 'கோ-லோ' நிறுவனம் மற்றும் சத்யா ஏஜன்சி இணைந்து வழங்குகின்றன.
பந்தலுாரில் 'டியூஸ்' மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 41 மாணவர்கள் பங்கேற்றனர். 16பேர் தேர்வு செய்யப்பட்டு, 8- அணிகளாக பிரிக்கப்பட்டனர். காலிறுதி சுற்றுக்கான வினாடி - வினா போட்டி,4- பிரிவுகளாக நடந்தது.
அதில், 'எப்' அணியை சேர்ந்த, 8-ம் வகுப்பு மாணவர் வருண், நிதீஷ்குமார் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர். அவர்களுக்கு பள்ளி தாளாளர் உஜ்வல் தீபக்டேரா சாகிப் வாழ்த்து தெரிவித்தார்.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, முதல்வர் சுதீந்திரநாத், பொறுப்பாசிரியர்கள் விக்னேஸ்வரன், சேகர், பிரவீண்தாஸ் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் கேடயம், பதக்கங்களை வழங்கினர்.
பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, அரை இறுதி போட்டி நடத்தப்படும். மேலும், ஜன., மாதத்தில் நடக்கும் இறுதி போட்டியில், முதல் பரிசு பெறும், இரு மாணவர் களுக்கு, அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தை காண வாய்ப்பு கிடைக்கும்.
இரண்டாம் இடம் பிடிக்கும், இரு மாணவர்களுக்கு, லேப்டாப், மூன்றாம் இடம் பிடிக்கும் இருவருக்கு 'டேப்லெட்' மற்றும் நான்காம் பரிசாக, பத்து மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் வாட்ச்' வழங்கப்படும். வெற்றி பெற்ற டாப், 25 அணிகளை சேர்ந்த, 50 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
முதல்வர் சுதீந்திரநாத் கூறுகையில், ''மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்தி, அறிவியல் சார்ந்த புதிய தகவல்களை மனதில் பதிய வைத்துக் கொள்ள ஏதுவாக உள்ளது.
மேலும், எளிதாக கணிதம் படிப்பது மற்றும் செய்தித்தாளுக்கும்- மாணவர்களுக்குமான உறவை மேம்படுத்துவது, மாணவர் மத்தியில் வாசிப்பு திறனை அதிகரிப்பது ,போட்டி தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பது, போன்ற செயல்களில் பட்டம் இதழ் முனைப்பு காட்டி வருவது வரவேற்க கூடியது,'' என்றார்.
ஆசிரியர் விக்னேஸ்வரன் கூறுகையில், ''மாணவர்கள் பாடங்களை படிக்கும் போது, அறிவியல் சார்ந்த தகவல்கள் மற்றும் ஆண்டுகள் குறிப்பிட்ட தாவரங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த பொருட்களின் பெயர்களை, மனதில் பதிய வைப்பது கடினம்.
ஆனால், பட்டம் இதழை வாசிக்கும்போது, படங்களுடன் கூடிய தகவல்களை, மனதில் எளிதாக பதிந்து அதனை வெளிப்படுத்த ஏதுவாக அமைகிறது.
பட்டம் இதழை தொடர்ந்து படிப்பதன் மூலம், மாணவர்கள் எதிர்காலத்தில் போட்டி தேர்வுக்கு தங்களை தற்போதே தயாராகிக் கொள்ளும், முறை உருவாகி அவர்கள் வாழ்க்கையில் மேம்பட வழி ஏற்படுகிறது,'' என்றார்.