/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சோதனை மையங்களில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுப்பு! நெரிசலை குறைக்கும் இ-பாஸ் முறை தோல்வியா?
/
சோதனை மையங்களில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுப்பு! நெரிசலை குறைக்கும் இ-பாஸ் முறை தோல்வியா?
சோதனை மையங்களில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுப்பு! நெரிசலை குறைக்கும் இ-பாஸ் முறை தோல்வியா?
சோதனை மையங்களில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுப்பு! நெரிசலை குறைக்கும் இ-பாஸ் முறை தோல்வியா?
ADDED : அக் 03, 2025 10:13 PM

கூடலுார்: 'கூடலுார் சில்வர் கிளவுட், மசினகுடி சோதனை மையங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சீசன் காலங்களில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்க வேண்டும்; அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இ-பாஸ் ஆய்வு குறித்து கண்காணிக்க வேண்டும்,'என, வலியுறுத்தப்பட் டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஊட்டிக்கு, அதிக வாகனங்கள் வந்து செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக, ஆய்வில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவுப்படி, நாள்தோறும் எத்தனை வாகனங்கள், இப்பகுதிக்கு வந்து செல்கின்றன என்பதை கண்டறிய, கடந்த ஆண்டு மே, 7ம் தேதி முதல் இ--பாஸ் நடைமுறைக்கு வந்தது.
இதற்காக, கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை சில்வர் கிளவுட்; மசினகுடி சாலையில் இ--பாஸ் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு 'பூம் பேரியர்' தொழில் நுட்பத்தில் தானியங்கி முறையில் இ--பாஸ், மற்றும் பசுமை வரி வசூல் செய்யப்படுகிறது. அதன்பின்பு ஊட்டிக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
விடுமுறை நாட்களில் அதிகம்
இந்நிலையில், வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை மற்றும் சீசன் காலங்களில் இவ்வழியாக, கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், சுற்றுலா வாகனங்களுக்கு, இ-பாஸ் சோதனை, பசுமை வரி வசூல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஊட்டிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
தற்போது, ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, ஊட்டிக்கு வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. சில்வர் கிளவுட், மசினகுடி இ--பாஸ் சோதனை மையத்தில், ஆய்வு பணியில் பெரும் தாமதம் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'விடுமுறை மற்றும் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு, இ-பாஸ் சோதனை மற்றும் பசுமை வரி வசூல் செய்ய கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். அப்போது தான், சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்க்க முடியும். மேலும், சில இ- பாஸ் மையங்களில் சோதனை செய்யாமல், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சுற்றுலா வாகனங்களை அனுமதித்தும் வருகின்றனர். இதனால், ஐகோர்ட் உத்தரவுகளை முறைபடுத்த முடியாத சூழ்நிலை தொடர்கிறது. இ-பாஸ் முறை தோல்வியடைகிறாக என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து ஆய்வு செய்து, கோர்ட் உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.
கூடலுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் கூறுகையில்,'' அரசு விடுமுறை மற்றும் சீசன் நாட்களில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வரும் போது, சோதனை சாவடிகளில் கூடுதல் ஊழியர்களை நியமிப்பது குறித்து, மாவட்ட நிர்வாத்துக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், அதிகாலை, இரவு நேரங்களில் இ--பாஸ் சோதனைகள் முறையாக நடக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.