ADDED : ஜூலை 25, 2025 08:41 PM

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கிணாச்சேரி பகுதியில் தனியார் நிறுவனத்தின் மொபைல் டவர் உள்ளது.
கடந்த, ஜூலை, 21ம் தேதி இந்த டவர் நிறுவப்பட்டிருந்த கட்டடத்தில் கதவு உடைக்கப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
தகவல் அறிந்து, பாலக்காடு டவுன் தெற்கு போலீசார், மொபைல் போன் நிறுவன அதிகாரிகளை அழைத்து வந்து நடத்திய சோதனையில், பேட்டரி உட்பட, 1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டவர் உபகரணங்கள் திருட்டு போனது தெரிந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் விபின்குமார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடத்தினர்.
அதில், உபகரணங்களை திருடியது, மாங்கரை தேனூர் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ், 35, என்பது தெரியவந்தது. மேலும், அந்த உபகரணங்களை பழைய பொருட்கள் வாங்கும் கடையில் விற்பனை செய்துள்ளதும் தெரிந்தது.
இதையடுத்து, நேற்று சத்யராஜை, போலீசார் கைது செய்தனர்.