/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துாசு பறக்கும் சாலையால் வியாபாரிகள் பாதிப்பு
/
துாசு பறக்கும் சாலையால் வியாபாரிகள் பாதிப்பு
ADDED : நவ 22, 2024 11:20 PM
பந்தலுார்: பந்தலுார் பஜார் பகுதி சாலை துாசு மண்டலமாக மாறி வருவதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பந்தலுார் பஜார் பகுதி சாலை முழுமையாக சேதமடைந்த நிலையில், நெடுஞ்சாலை துறை மூலம் ஜல்லிகற்கள் மற்றும் பாறை துகள்கள் கொட்டப்பட்டன. கடந்த சில நாட்களாக சாலையின் சில பகுதிகளில் 'ரோடு பாண்ட்' எனப்படும் ரெடிமேடு தார் கலவையால் சீரமைக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிகளில், ஏற்கனவே போடப்பட்ட பாறை துகள்கள் அப்படியே இருப்பதால், தற்போது வெயிலான காலநிலையில் வாகனங்கள் சென்று வரும்போது, பஜார் பகுதி துாசு மண்டலமாக மாறிவிடுகிறது.
இதனால், ஹோட்டல் மற்றும் டீக்கடைகள், பேக்கரிகள் துாசு படலத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்பவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். வியாபாரிகள் கூறுகையில், 'நெடுஞ்சாலை துறையினர் இப்பகுதியில் நிலவும் சாலை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இது தொடர்பாக, பந்தலுார் வளர்ச்சி குழு சார்பில் நகராட்சி மற்றும் டி.எஸ்.பி., யிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.