/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி சேரிங்கிராசில் போக்குவரத்து மாற்றம்
/
ஊட்டி சேரிங்கிராசில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 20, 2025 06:34 AM

ஊட்டி: ஊட்டி சேரிங்கிராஸ் தாவரவியல் பூங்கா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி சர்வதேச சுற்றுலா தல அந்தஸ்தில் இருப்பதால் ஆண்டுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். தவிர, வார நாட்கள், தொடர் விடுமுறை நாட்களிலும் கணிசமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம்.
சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊட்டி நகரில் பார்க்கிங் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, கோத்தகிரி சாலை, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சீசன் சமயத்தில் திணறும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், போலீசார்,நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர் சில ஆய்வுகளை நடத்தி சேரிங்கிராஸ் பூங்கா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். அதில், ஊட்டி சேரிங்கிராசிலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் தடுப்பு அமைத்து ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் இடப்புறத்தில் உள்ள பூங்காவின் ஒரு பகுதியை அகற்றி சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து கீழ்நோக்கி வரும் வாகனங்கள், புதிதாக அமைக்கப்பட்ட சாலை வழியாக சேரிங்கிராசை வந்தடையும் வகையில் சாலை போடப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில்,' இந்த மாற்று ஏற்பாடுகளால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. எனினும், கோடை சீசனின் போது தான் இதற்கான முழு விபரம் தெரிய வரும்,' என்றனர்.