/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் போக்குவரத்து நெரிசல்
/
மலை பாதையில் போக்குவரத்து நெரிசல்
ADDED : செப் 24, 2024 11:31 PM
குன்னுார் : குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குன்னுார்-- மேட்டுப்பாளையம் சாலையில் தேசிய நெடுஞ்சாலைதுறையினர் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதில், குரும்பாடி, பர்லியார் பகுதிகளில் பாலம் பணிகள் நடந்து வரும் நிலையில் போலீசார் பணியில் அமர்த்தப்படுவதில்லை.
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால், நீலகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மற்றும் கோவை விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
அதே போல், ஊட்டிக்கு வரும் பயணிகளும் ஒரு மணி நேரம் முதல், 2 மணி நேரம் வரை தாமதமாக வர வேண்டிய நிலை நீடிக்கிறது.நேற்று முன்தினம் இரவு, 6:00 மணியில் இருந்தே நெரிசல் துவங்கிய நிலையில், இரவு, 9:00 மணிக்கு பல கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் அனுப்பாமல், ரோந்து பைக்கில் இரு போலீசார் மட்டுமே பர்லியாருக்கு அனுப்பி சீர் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போக்குவரத்து போலீசார் மற்றும் 'ஹைவே' போலீசார் இருசக்கர வாகனங்கள் உட்பட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய செல்வதில்லை.
குறிப்பாக, நந்தகோபால பாலம், காட்டேரி உள்ளிட்ட இடங்களில் மட்டும், 10 க்கும் மேற்பட்ட போலீசார் ஒன்றாக நின்று அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கூடுதல் போலீசாரை இங்கு பணிகளில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.