/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குரும்பாடி மலையில் விதிமீறல்?மரங்கள் வெட்டி சாய்த்த பிறகு கட்டுமானம்: பழங்குடியினர் வாழும் கிராமங்களுக்கு ஆபத்து
/
குரும்பாடி மலையில் விதிமீறல்?மரங்கள் வெட்டி சாய்த்த பிறகு கட்டுமானம்: பழங்குடியினர் வாழும் கிராமங்களுக்கு ஆபத்து
குரும்பாடி மலையில் விதிமீறல்?மரங்கள் வெட்டி சாய்த்த பிறகு கட்டுமானம்: பழங்குடியினர் வாழும் கிராமங்களுக்கு ஆபத்து
குரும்பாடி மலையில் விதிமீறல்?மரங்கள் வெட்டி சாய்த்த பிறகு கட்டுமானம்: பழங்குடியினர் வாழும் கிராமங்களுக்கு ஆபத்து
ADDED : செப் 10, 2024 02:41 AM

குன்னுார்:கேரளா வயநாடு நிலச்சரிவில் பாதித்த சூரல்மலை போன்று, குன்னுார் மலையில், புதுக்காடு, குரும்பாடி உட்பட பழங்குடியினர் கிராமங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கேரளா, வயநாடு மாவட்டத்தில், பேரழிவு தந்த நிலச்சரிவு சோகம் இன்றும் மக்கள் மனதில் ஆறாத ரணமாக உள்ளது.
இந்த பேரழிவுக்கு பின் நடந்த பல்வேறு ஆய்வுகளில், 'காடழிப்பு; குவாரி வடிவில் நில பயன்பாட்டு மாற்றம்; விதிமீறிய கட்டுமானங்கள்; கனமழை ஆகியவை முண்டக்கை, சூரல்மலை கிராமங்களில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவில், உயிரிழப்புகளுக்கு காரணமாக மாறியுள்ளது,' என, தெரியவந்துள்ளது.
மேலும், 'இதேபோன்ற மலை அமைப்புகளை கொண்ட, நீலகிரியிலும் விதிமீறல்கள் அதிகரித்தால், எதிர்காலத்தில் ஏற்படும் பேரழிவை தடுக்க முடியாது,' எனவும், ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குன்னுாரில் அத்துமீறல் அதிகம்
இந்நிலையில், வனங்கள் சூழ்ந்த, குன்னுார் மலை பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டும்; கட்டுமான பணிகளுக்காக மலைகள் தோண்டப்பட்டும் வருவது தொடர்ந்து வருகிறது. இங்குள்ள சின்ன குரும்பாடி அருகே வனப்பகுதிக்குள் இருந்த தனியார் சுற்றுலா விடுதி பகுதியில், 2009ல் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு உட்பட பல பாதிப்புகள் ஏற்பட்டன. அங்கு செயல்பட்ட விடுதி கடந்த, 2021ம் ஆண்டு யானை வழித்தட பாதுகாப்புக்காக 'சீல்' வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் குரும்பாடி, புதுக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையின் மேற்பகுதியில் பொக்லைன் பயன்படுத்தி மலையை குடைந்து, பட்டியலின மரங்கள் வெட்டி சாய்த்து, பிரம்மாண்ட சாலை அமைக்கப்பட்டது. அது குறித்து ஆய்வு செய்ய, மாநில அரசு; மாவட்ட நிர்வாகத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் மனுக்களை அனுப்பியும் இதுவரை பயனேதும் இல்லை.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
இப்பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர், பிரவீன்குமார் மாநில முதல்வர் தனிப்பிரிவு; மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனு:
குரும்பாடி மேற்புறத்தில் வன விலங்குகள் அதிகம் உள்ள பகுதியில் உள்ள பட்டா நிலத்தில், மலையை குடைந்து, விதிமீறி சாலை அமைத்து பழங்குடியினரின் குடிநீர் ஆதாரங்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதனால், பழங்குடி கிராமங்களுக்கு பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மலையை குடைந்த இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு அங்குள்ள பழங்குடியினர் கிராமம் சகதியாக மாறியது. அதிகாரிகள் ஆய்வும் செய்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, 'வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது,' என, மத்திய அரசு கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதனை கண்டு கொள்ளாமல் விட்டதால், அங்கு பேரழிவு ஏற்பட்டது. அதேபோல், குரும்பாடி பகுதியில் பேரிடர் வராமல் இருக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.