ADDED : செப் 20, 2026 07:04 PM
குன்னூர்:
ஊட்டி--– குன்னூர் சாலையில், பாய்ஸ் கம்பெனி அருகே பைக் மீது மோதிய லாரி, பள்ளத்தில் கவிழ்ந்தது.
குன்னூர் எல்லநள்ளியில் இருந்து பந்துமை பகுதிக்கு நேற்று அதிகாலை 2:00 மணியளவில் கேரட் ஏற்ற, ஈச்சர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதேபோல, சிம்ஸ்பார்க் அருகே ஐ.டி., கம்பெனியில் பணி முடித்து, பாய்ஸ் கம்பெனியை சேர்ந்த ரசல், 38, என்பவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
லிங்கம்மாள் காலனி அருகே வலது புறம் உள்ள தனது வீட்டிற்கு பைக்கை திருப்பியுள்ளார்.
அப்போது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ராஜூ, இடதுபுறமாக திருப்பினார். எனினும் பைக் மீது லாரி மோதியதுடன், சாலையோர தடுப்புச்சுவரின் மீது ஏறி பள்ளத்தில் பாய்ந்தது. விபத்தில் பைக்கில் வந்தவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். வெலிங்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
