ADDED : செப் 18, 2026 04:11 PM
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் நேற்று முன்தினம் மாலை விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை காண பாலக்காட்டிலிருந்து வந்த ஒரு குழுவினருக்கும், விழா கமிட்டியினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., அமல் சந்திரன் தலைமையிலான போலீசார், கோஷ்டி மோதலை தடுத்தனர். அப்போது ஆத்திரமடைந்த கும்பல், எஸ்.ஐ., அமல் சந்திரனை கீழே தள்ளி விட்டு தாக்கினர். எஸ்.ஐ.,யை மீட்க முயன்ற பெண் காவலர் ஸ்ரீஜினியையும் அந்த கும்பல் தாக்கியது. இதில், இருவரும் காயமடைந்தனர்.
இதையடுத்து, சக போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பாலக்காடு கொடுந்திரப்பள்ளி சேங்கோடு பகுதியை சேர்ந்த சிபின், 21, மற்றும் தேனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், 22, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
