/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீரமைக்காத குறுக்கு பாதை: சறுக்கி விழும் மக்கள்
/
சீரமைக்காத குறுக்கு பாதை: சறுக்கி விழும் மக்கள்
ADDED : டிச 17, 2024 09:42 PM

கோத்தகிரி; கோத்தகிரி ஒன்னதலை- கலிங்கனட்டி இடையே, குறுக்குப்பாதை சீரமைக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னதலை- கலங்கனட்டி இடையே குறுக்குப் பாதை அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக, இப்பாதையை இரு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களில், இவ்வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு இடுபொருட்கள் மற்றும் விளை பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. இதனால், விவசாயிகள் பெருமளவில் பயன் அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பாதை சீரமைக்கப்படாமல் உள்ளது. இருபுறமும் காட்டுச் செடிகள் ஆக்கிரமித்து, புதர் போல் காட்சியளிக்கிறது.
மேலும், வாகனங்கள் மற்றும் சென்றுவர முடியாத அளவுக்கு, சமீபத்தில் பெய்த மழையில் சேறு சகதி நிறைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
கிராம சபை கூட்டங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதி, கக்குச்சி ஊராட்சி நிர்வாகம், இப்பாதையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.