திறக்கப்படாத அங்கன்வாடி கட்டடம்: உண்ணாவிரதம் இருக்க முடிவு
திறக்கப்படாத அங்கன்வாடி கட்டடம்: உண்ணாவிரதம் இருக்க முடிவு
UPDATED : நவ 29, 2026 06:50 PM
ADDED : நவ 29, 2026 06:50 PM
குன்னூர்: குன்னூர் நகராட்சி 3-வது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்காததுடன், அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் உண்ணாவிரத போராட்டம் நடத்த அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி 3-வது வார்டில், எம்.எல்.ஏ., நிதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட 2023 ல் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கி 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை திறக்கப்படவில்லை.
இதனால், வார்டில் உள்ள ஏழை குழந்தைகள் மழைகாலங்களில் வேறு இடத்திற்கு சென்று சிரமத்துடன் பயின்று வருகின்றனர்.
மேலும், வேளாங்கண்ணி நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணி துவங்கி 6 மாதங்கள் ஆகியும் முடிக்கப்படாததால் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
குன்னூர் நகர அ.தி.மு.க., செயலாளர் சரவணகுமார் கூறுகையில், அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறப்பது; கழிவுநீர் கால்வாயை சீரமைப்பது ; மாணவர்களை கடிக்கும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பது ; இரண்டு முறை விபத்து ஏற்பட்ட சாலையை சீரமைப்பது ; ஸ்லேட்டர் ஹவுஸ் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் தடுப்புச்சுவர் அமைப்பது ; குடிநீர் குழாய்களை சீரமைப்பது ; தடுப்புச்சுவர் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காண கோரி டிச., 2-ம் தேதி அங்கன்வாடி மையத்தில் மக்களுக்கான உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.என்றார்.
