ADDED : செப் 07, 2026 09:16 PM
பந்தலுார்: பாலுாட்டும் தாய்மார்களுக்காக அமைக்கப்பட்ட கட்டடங்கள், எதற்கும் பயன் இல்லாமல் பாழடைந்து வருகிறது.
கடந்த, 2015ம் ஆண்டு ஆக., மாதம், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பஸ் நிலையங்களில், பாலுாட்டும் தாயமார்களுக்கான அறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும், 352 பஸ் ஸ்டாண்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொது நிதியில் இருந்து தனி கட்டடங்கள் கட்டப்பட்டு, கர்ப்பிணி தாய்மார்கள் அமரும் வகையில் இருக்கை வசதி, குடிநீர் மற்றும் மின்விசிறி, கழிவறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே முறையாக பராமரிக்கப்பட்டு, பாலுாட்டும் தாய்மார்கள் பயன் அடைந்து வந்த நிலையில், படிப்படியாக இந்த திட்டம் செயல் இழந்தது.
தற்போது, இந்த கட்டடங்கள் பயன்படுத்தாமல் பூட்டப்பட்டு பாழடைந்து வருகிறது.
குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், பஸ்களுக்கு காத்திருக்கும் நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்கு பாலுாட்ட இட வசதி இல்லாமல் சிரமப்படுவது தொடர்கிறது. எனவே, இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
