ADDED : அக் 01, 2026 08:35 AM

குன்னுார்: குன்னுாருக்கு இரு'பிக்--அப்' வாகனங்களில், 12 மாடுகளை அடைத்து கொண்டு வந்தது தொடர்பாக, வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டன.
குன்னுாரில் உள்ள நகராட்சி இறைச்சி கூடத்திற்கு, சமவெளி பகுதியில் இருந்து, நேற்று இரு 'பிக்--அப்' வாகனங்களில் தலா, 6 மாடுகள் வீதம், 12 மாடுகளை அடைத்து கொண்டு வரப்பட்டது. மேட்டுப்பாளையம் -குன்னுார் மலைப்பாதையில் வாகனங்களை, இந்து முன்னணியினர் தடுத்து, 'ஹைவே' போலீசார், சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அப்போது, ஹைவே போலீசார் அங்கிருந்து வாகனங்களை திருப்பி அனுப்பி உள்ளனர். இதை தொடர்ந்து, மீண்டும் வாகனங்கள் குன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டன.
இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் ஹரிஹரன், சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் சசிகுமார் மற்றும் குழுவினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த பின் கூறுகையில், ''மாடுகளுக்கு தீவனமும், தண்ணீரும் இன்றி, அசையக்கூட வழியின்றி ஆபத்தான முறையில் அடைத்து கொண்டு வரப்பட்டன.
அதனை தடுத்து கேள்வி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்தனர். புகார் கொடுத்துள்ளோம். வழக்குபதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு, மாடுகளை மசினகுடி கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
