/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெடுஞ்சாலையில் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பதால் கடும் அதிருப்தி! மாநில எல்லையில் நுழைவு வரி செலுத்தியும் விதிமீறல்
/
நெடுஞ்சாலையில் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பதால் கடும் அதிருப்தி! மாநில எல்லையில் நுழைவு வரி செலுத்தியும் விதிமீறல்
நெடுஞ்சாலையில் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பதால் கடும் அதிருப்தி! மாநில எல்லையில் நுழைவு வரி செலுத்தியும் விதிமீறல்
நெடுஞ்சாலையில் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பதால் கடும் அதிருப்தி! மாநில எல்லையில் நுழைவு வரி செலுத்தியும் விதிமீறல்
ADDED : பிப் 10, 2025 10:31 PM

கூடலுார்; ஊட்டி-- கூடலுார் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு, 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பது சுற்றுலா பயணிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.
ஊட்டியில் இருந்து நடுவட்டம், கூடலுார் வழியாக, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் மேல் கூடலுார் அருகே அமைந்துள்ள, பழமையான கற்பூர மர சோலையை பார்த்து ரசிப்பதில், இந்த வழியாக வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனை ஒட்டி ஊசிமலை அமைந்துள்ள காட்சி முனையும் அமைந்துள்ளது. இதனால், இந்த பகுதியில் அதிக அளவில்சுற்றுலா பயணிகள் தங்கள்வாகனங்களை, சாலை ஓரத்தில் நிறுத்தி இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.
நெடுஞ்சாலையில் கட்டணம் வசூல்
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, கற்பூர மர சோலைகள் அமைந்துள்ள, சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, நடுவட்டம் பேரூராட்சி சார்பில் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 'தேசிய நெடுஞ்சாலையில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது,' என்ற விதிமுறை உள்ள போதும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சோதனை சாவடியில் நுழைவு வரி
பேரூராட்சி பணியாளர்கள் கூறுகையில்,'இந்த பகுதியில் கார் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு, 50 ரூபாய்; பைக் உள்ளிட்ட சிறிய வாகனங்களுக்கும், 25 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி, இயற்கையை ரசிக்க கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் இப்பகுதியில் மட்டும் தான் உள்ளது. ஏற்கனவே, தமிழக - கேரள எல்லையில் உள்ள, கக்கனல்லா, பாட்டவயல், தாளூர், நம்பியார்குன்னு, சோலாடி, நாடுகாணி ஆகிய முக்கிய சோதனை சாவடிகளில் நுழைவு கட்டணம் செலுத்தி வரும் சுற்றுலா பயணிகள், இது போன்ற பார்க்கிங் கட்டணங்களையும் செலுத்துவதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்புள்ளது,' என்றனர்.
நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப்குமார் கூறுகையில்,''நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 30 கி.மீ.,துாரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி 'பிளாஸ்டிக்' உள்ளிட்ட கழிவு பொருட்களை, சாலை ஓரத்தில் வீசி செல்கின்றனர். இதனை அகற்ற பேரூராட்சி செலவு செய்கிறது. அதற்காக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது,'' என்றார்.
தேசிய நெடுஞ்சாலை துறை உதவிகோட்ட பொறி யாளர் எழிலரசன் கூறுகையில், ''இது குறித்து, கூடலுார் தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்த பின் முழுமையான தகவல் தெரிவிக்கப்படும்,'' என்றார்.