/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழக - கேரள எல்லையில் அதிரடி படையின் கண்காணிப்பு தீவிரம்!: கர்நாடகாவில் தப்பிய நக்சல்களை தேடும் போலீசார்
/
தமிழக - கேரள எல்லையில் அதிரடி படையின் கண்காணிப்பு தீவிரம்!: கர்நாடகாவில் தப்பிய நக்சல்களை தேடும் போலீசார்
தமிழக - கேரள எல்லையில் அதிரடி படையின் கண்காணிப்பு தீவிரம்!: கர்நாடகாவில் தப்பிய நக்சல்களை தேடும் போலீசார்
தமிழக - கேரள எல்லையில் அதிரடி படையின் கண்காணிப்பு தீவிரம்!: கர்நாடகாவில் தப்பிய நக்சல்களை தேடும் போலீசார்
ADDED : நவ 22, 2024 11:24 PM

பந்தலுார்: கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில், நக்சல் இயக்கத்தின் முக்கிய தலைவர் விக்ரம் கவுடா சுட்டு கொல்லப்பட்ட நிலையில், தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாடு, மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நக்சல்கள் அதிகம் முகாமிட்டனர். இதனால், கேரளா மாநிலத்தில் தண்டர்போல்ட் அதிரடிப்படையினர், தமிழகத்தின் அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், இவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து, கட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லையோர கேரள பகுதியில் முகாம்
எனினும், தமிழக எல்லையான நீலகிரி மாவட்டம், பந்தலுாரை ஒட்டி உள்ள, கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில், அடிக்கடி தங்கள் முகாம்களை அமைத்து பழங்குடியின கிராமங்களில் சென்று, அரசு நிர்வாகங்ளுக்கு எதிரான பிரசாரத்தில் நக்சல்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த, 2016ல் கேரளா நிலம்பூர் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், முக்கிய நிர்வாகிகள் கொல்லப்பட்ட நிலையில், தொடர்ந்து, 2019 பாலக்காடு அருகே அட்டப்பாடி வனத்தில், நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர். கடந்த, 2- மாதங்களுக்கு முன் வயநாடு பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி, நக்சல் முகாம்களை கேரளா போலீசார் அழித்து, முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினர்.
முக்கிய தலைவர் சுட்டு கொலை
இந்நிலையில், வயநாடு மாவட்டத்தை ஒட்டிய, கர்நாடக மாநிலம் உடுப்பி, கப்பினாலே வனத்தில், இரு நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூட்டில், 22 ஆண்டுகளாக தேடி வந்த நக்சல் பயிற்சியாளர் விக்ரம் கவுடா சுட்டு கொல்லப்பட்டார். இவரின் இழப்பால் கர்நாடக மாநிலத்தில் நக்சல் குழுவினர் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'துப்பாக்கி சூட்டில் தப்பிய, 10 பேர் கொண்ட நக்சல் கும்பல், கேரளா வயநாடு பகுதிக்கு தப்பி வரக்கூடும்,' என, கேரள உளவுத்துறை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
இதனால், 'தமிழக அதிரடிப்படை வீரர்கள், 12 பேர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 6 பேர்,' என, 18 பேர் பந்தலுாரை ஒட்டிய, தமிழக- கேரள வனப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
அதில், பந்தலுார் கிளன்ராக், வெண்ட்வொர்த், புளூமவுண்டன், சோலாடி, கட்டகுண்டு, தோடுமலை, மருதா ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் பவுலோஸ் கூறுகையில், ''உயரதிகாரிகள் ஆலோசனை படி மாநில எல்லை பகுதியில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வனத்தை ஒட்டிய கிராமங்களில், புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, இப்பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்களில் புதிய நபர்கள் வந்து உணவு பொருட்களை கேட்டால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த தேடுதல் பணியில், மூன்று மாநில போலீசார் தொடர்பில் உள்ளனர்,'' என்றார்.

