மலை மாவட்டத்தில் 'ஹோம்ஸ்டே' பெயரில் நடந்த...விதிமீறல்கள்!: ஐகோர்ட் அதிரடி கேள்விகளால் கலக்கத்தில் அதிகாரிகள்
மலை மாவட்டத்தில் 'ஹோம்ஸ்டே' பெயரில் நடந்த...விதிமீறல்கள்!: ஐகோர்ட் அதிரடி கேள்விகளால் கலக்கத்தில் அதிகாரிகள்
UPDATED : செப் 24, 2026 04:14 AM
ADDED : செப் 23, 2026 04:42 PM

குன்னுார்: நீலகிரியில் உள்ளாட்சி வாரியாக,'ஹோம்ஸ்டே' பெயரில் நடந்த விதிமீறல்கள் குறித்து, ஐகோர்ட் எழுப்பிய அதிரடி கேள்விகளால், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
நீலகிரியில், 1800-களின் முற்பகுதியில் பூர்வகுடிகளின் பாரம்பரிய வாழ்விடங்களை தவிர்த்து, மிக குறைந்த அளவிலேயே வீடுகள் இருந்தன. பிரிட்டிஷ் ஆவணங்கள் மற்றும் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1901ல் நீலகிரியில், 22 ஆயிரத்து 780 ஆக இருந்த கட்டடங்களின் எண்ணிக்கை, 1921-ல், 28 ஆயிரத்து 400 ஆகவும்; 1931-ல் 35 ஆயிரத்து 100 ஆகவும் உயர்ந்தது. சுதந்திரத்திற்கு பிறகு, 1951-ல் 39 ஆயிரத்து 150 ஆகவும்; 1981-ல் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 450 ஆகவும் உயர்ந்தது.
எண்ணிக்கை பல மடங்கு உயர்வு அதன்பின், சுற்றுலா மற்றும் வணிக ரீதியான விரிவாக்கத்தால், 2001-ல் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 215 ஆகவும்; 2011-ல் 2 லட்சத்து 26 ஆயிரத்து 381 எனவும் கட்டடங்களின் எண்ணிக்கை உயர்ந்தது. தற்போது, உள்ளாட்சி பதிவேடு மற்றும் செயற்கைகோள் தரவுகளின்படி, 2.65 லட்சத்தை கடந்து பல மடங்கு உயர்ந்து, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டு, தேயிலை தொழில் மற்றும் கட்டுக்கடங்காத கட்டடங்கள் மற்றும் சுற்றுலா விரிவாக்கத்தால் பசுமை மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்டின் அதிரடி கேள்விகள் இவ்வாறு, நீலகிரியின் சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு விதிகளை தவிடுபொடியாக்கி, அதிகரித்த சட்டவிரோத ஹோம்ஸ்டேக்கள், ரிசார்ட்டுகள், காட்டேஜ்கள் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் சிறப்பு அமர்வு நீதிபதிகள், சதீஷ்குமார், ராஜசேகர் ஆகியோர், அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதுடன், சாட்டையடி கேள்விகளையும் தற்போது எழுப்பியுள்ளனர்.
அதில், 'கட்டட பயன்பாட்டை மாற்ற சட்டத்தில் இடமில்லாத போது, குடியிருப்பு அனுமதியுடன் வணிகரீதியாக இயங்கும் காட்டேஜ்களுக்கு வணிக வரி மற்றும் மின்கட்டணம் வசூலிக்க எந்த சட்டத்தில் இடமுண்டு. தாசில்தார் உரிமம் அளித்தாலோ, நகராட்சி வரி வசூலித்தாலோ அத்தகைய விதிமீறல் கட்டடங்கள் சட்டப்பூர்வமாகிவிடாது. இத்தகைய சட்டவிரோதத்தை அரசு சரிசெய்ய விரும்புகிறதா,' என்ற கேள்விகளை எழுப்பி உள்ளனர். மேலும், இதற்கான தெளிவான நிலைப்பாட்டை குறித்து, அதிகாரிகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என, உத்தரவிட்டுள்ளதால், விதிமீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
