கால்வாயில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் குப்பை, நெகிழி பெருக்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு
கால்வாயில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் குப்பை, நெகிழி பெருக்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : செப் 03, 2026 05:51 PM

ஊட்டி: ஊட்டி நகரின் பிரதான கால்வாயாக கோடப்பமந்து கால்வாய் விளங்குகிறது. நகரின் கழிவு நீர் , மழை நீர் இந்த கால்வாயில் கலக்கிறது. கால்வாயில் வரும் தண்ணீர் படகு இல்ல மையப் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட பின், படகு இல்ல ஏரியில் கலக்கிறது.
கால்வாயை தூர்வார சம்மந்தப்பட்ட துறையினர் போதிய அக்கறை காட்டாததால் குப்பை , நெகிழி கால்வாயில் பெருகியதால் புதர் மண்டி கிடக்கிறது. குப்பை கழிவுகளால் மழை சமயத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு நகரில் உள்ள பல குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.
தவிர, விதிகளை மதிக்காமல் சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்கள் வீசியெறியும் டன் கணக்கிலான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் கால்வாயை முழுமையாக அடைக்கிறது. கால்வாயை சுற்றியுள்ள வணிக வளாகங்கள் , உணவகங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் மனித கழிவுகளும், சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீரும் நேரடியாக இதில் திறக்கப்படும் சட்ட விரோத செயல்களும் நடக்கிறது.
கடும் துர்நாற்றம் இக்கால்வாய் வழியாக வரும் சேறும் , சகதியும் குப்பைகளும் ஏரியின் அடியில் படிந்து வருவதால் படகு இல்ல ஏரியும் மாசுபட்டு வருகிறது. இதனால்,ஏரியின்பாதி அளவில் ஆகாயதாமரை பரவி அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாக்கடை நீர் பரவி , கடுமையான தூர்நாற்றம் வீசுவதால் அங்கு படகு சவாரி செய்ய சுற்றுலா பயணியர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,‘கடந்த காலங்களில் பல்வேறு நிதியின் வாயிலாக , 10 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி தூர்வாரவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தரமில்லாத பணிகளால் மீண்டும் கால்வாய் மோசமான நிலைக்கு மாறி உள்ளது. அவல நிலையை மாற்ற சம்மந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு தரமான தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்,’ என்றனர்.
