‘மலை பாதை நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது தண்ணீர்’
‘மலை பாதை நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது தண்ணீர்’
UPDATED : அக் 11, 2026 07:09 PM
ADDED : அக் 11, 2026 07:06 PM

குன்னூர்: வறட்சிக்கு பின் மழை பொழிவால் குன்னூர் மலைப்பாதையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல மாதங்களாக நிலவி வந்த கடும் வறட்சியின் காரணமாக, நீராதாரம் குறைந்து மலை பாதைகளில் உள்ள அருவிகள் அனைத்தும் நீரின்றி வறண்டு பாறைகளாக மட்டுமே காட்சியளித்தன. இதனால், நீர்வீழ்ச்சிகளும் வறண்டன.
தற்போது குன்னூர் சுற்றுவட்டார மலை பகுதிகளில் தொடர் கனமழையால் இயற்கை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
மேட்டுப்பாளையம் --–- குன்னூர் தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் அமைந்துள்ள பர்லியார், மரப்பாலம் மற்றும் குரும்பாடி உள்ளிட்ட பகுதிகளில், மலை முகடுகளிலிருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீண்ட மாத வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பசுமை போர்த்திய மலைச்சரிவுகளில் துள்ளி வழியும் இந்த நீர்வீழ்ச்சிகள் அப்பகுதி முழுவதும் குளுமையான சூழலை உருவாக்கியுள்ளதுடன், அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகளையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ரசிக்க வைக்கிறது.
இதனால் வாகனங்களை நிறுத்தி பலரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து வருகின்றனர்.
அவ்வப்போது போலீசாரும் வனத்துறையினரும் நீர்வீழ்ச்சிக்குள் செல்லக்கூடாது என அறிவுரையும் வழங்குகின்றனர்.
