/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகனங்கள் கழுவுவதால் மாசடையும் தண்ணீர்
/
வாகனங்கள் கழுவுவதால் மாசடையும் தண்ணீர்
ADDED : ஜூலை 14, 2025 08:56 PM

கோத்தகிரி; கோத்தகிரி தண்ணீர் பள்ளம் பகுதியில், வாகனங்கள் கழுவுவதால், தண்ணீர் மாசடைந்து வருகிறது.
கோத்தகிரி -கோடநாடு சாலையில், கேர்பெட்டா புதுார் அருகே, தண்ணீர் பள்ளம் பகுதியில், வனத்துறை சார்பில், 'செக்டேம்' கட்டப்பட்டுள்ளது. வனப்பகுதியில் இருந்து வரும் ஊற்று நீர், இங்கு தேக்கி வைக்கப்படுகிறது. இந்த தண்ணீர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. வனவிலங்குகளும் வறட்சி நாட்களில் தண்ணீர் பருகி வருகின்றன.
இப்பகுதியில், 'வாகனங்கள் கழுவ கூடாது; தண்ணீர் மாசடையாமல் பாதுகாக்கப்பட வேண்டும்' என, வனத்துறை சார்பில், எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை மீறி, சமீப காலமாக வாகனங்கள் கழுவுவது தொடர்கிறது.
இதனால், வாகனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள், சோப்பு நுரை கலந்து, தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால், இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்கள் உட்பட, வனவிலங்குகளுக்கு உடல் உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், வாகனங்கள் கழுவுவதை தடுப்பதுடன், மீறி கழுவுபவர்களுக்கு, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.