/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் திட்டத்திற்கு போர்த்தி மந்து அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்! பிப்., மாத இறுதியில் 80 அடி வரை நீர்மட்டம் குறையும்
/
மின் திட்டத்திற்கு போர்த்தி மந்து அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்! பிப்., மாத இறுதியில் 80 அடி வரை நீர்மட்டம் குறையும்
மின் திட்டத்திற்கு போர்த்தி மந்து அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்! பிப்., மாத இறுதியில் 80 அடி வரை நீர்மட்டம் குறையும்
மின் திட்டத்திற்கு போர்த்தி மந்து அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்! பிப்., மாத இறுதியில் 80 அடி வரை நீர்மட்டம் குறையும்
ADDED : ஜன 09, 2025 11:15 PM

ஊட்டி : குந்தா நீர்மின் திட்ட பணிகளுக்காக, போர்த்திமந்து அணையில் இருந்து, 80 அடிவரை தண்ணீரை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே காட்டுகுப்பை பகுதியில், 1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4 பிரிவுகளில் மின் திட்டபணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், ஒரு பிரிவில், 125 மெகாவாட் வீதம், 500 மெகாவாட் உற்பத்திக்கான, குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதில், 2 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து, கட்டுமான பணிகள் மற்றும் மின் சாதனங்கள் பொருத்தும் பணிகள், 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
அதில், முதல் பிரிவுக்கான, 125 மெகாவாட் மின் உற்பத்தி பணி கடந்த, 2022 டிச ., மாதம் நிறைவடைந்து உற்பத்தி துவக்கி இருக்க வேண்டும். ஆனால் , காட்டுகுப்பையில் நிலவிய மாறுப்பட்ட கால நிலையாலும், நிர்வாக பணியில் ஏற்பட்ட இடையூறுகளாலும், குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிக்காமல் போனது.
80 அடி வரை வெளியேற்றம்
இந்நிலையில், இங்கு நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மின் வாரிய உயர் அதிகாரிகள் பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டனர். மேலும், குந்தா நீரேற்று மின் திட்டம் பணிகள் நடக்கும் பகுதியை ஒட்டியுள்ள எமரால்டு அணையின், நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் முழு கொள்ளளவில் இருப்பதால், பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, எமரால்டு அணையிலிருந்து, நாள்தோறும், வினாடிக்கு, 1000 கன அடி நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த நவ., 10ம் தேதி முதல் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. இரண்டு மாதங்களாக நாள்தோறும், 1000 கன அடி வீதம் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டதால், எமரால்டு அணையின் மொத்த அடியான, 184 அடியில், 80 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
போர்த்திமந்தில் நீர் வெளியேற்றம்
இதை தொடர்ந்து நடந்த ஆய்வுக்கு பின், போர்த்தி மந்து அணையில் இருந்தும், காட்டு குப்பை வழியாக எமரால்டு அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து வெளியேற்றும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
போர்த்திமந்து அணை, 130 அடி கொண்டதாகும். தற்போது, 105 அடி வரை தண்ணீர் இருப்பில் உள்ளது. அதில் இருந்து, 80 அடி வரை வினாடிக்கு, 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குந்தாமின் வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் முரளி கூறுகையில்,''குந்தா நீரேற்று மின் திட்ட பணி விரைவாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக போர்த்தி மந்து அணையில், 80 அடி வரை தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, எமரால்டு அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து வினாடிக்கு, 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பிப்., மாதம் இறுதி வரை தண்ணீர் வெளியேற்றப்படும். அதன்பின், மின் திட்ட பணிகளை விரைவாக முடித்து, மின் உற்பத்தி பணிகள் துவங்கும்,''என்றார்.

