‘தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
‘தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
ADDED : செப் 09, 2026 06:52 PM
ஊட்டி: ‘மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்கள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்,’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டியில் கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:
காலநிலை மாற்றத்தால், பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்ய வில்லை. இதனால், விவசாயம் மற்றும் குடிநீருக்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், தோட்டக்கலை துறை, கே.வி.கே., சார்பில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த ஆலோசனை படி, அனைத்து பகுதிகளிலும் சிறு விவசாயிகள் நடவடிக்கை எடுக்க அறுவுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு, மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவு குறைவாக உள்ளது.
இந்நிலையில், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் நீர் நிலைகளை துார் வாரி, குழாய் கசிவுகளை பழுதுபார்த்து, சீரான தண்ணீர் வினியோகிக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள சில பகுதிகளில் மட்டும் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி கேட்டுள்ளனர். உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து தேவையான பகுதிகளில் கிணறு தோண்ட ஆலோசித்து வருகிறோம். இத்தகைய சூழ்நிலையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்கள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அப்போது தான் வரும் நாட்களில் உள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியும். இதில், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு மக்களும் தங்களின் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
