/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குந்தா அணையில் சேறும், சகதியும் அதிகரிப்பால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்! அவ்வப்போது வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றம்
/
குந்தா அணையில் சேறும், சகதியும் அதிகரிப்பால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்! அவ்வப்போது வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றம்
குந்தா அணையில் சேறும், சகதியும் அதிகரிப்பால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்! அவ்வப்போது வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றம்
குந்தா அணையில் சேறும், சகதியும் அதிகரிப்பால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்! அவ்வப்போது வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றம்
ADDED : நவ 27, 2024 09:01 PM

ஊட்டி; மஞ்சூர் குந்தா அணையில் சகதி அதிகரித்து வருவதால், தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் இரு மதகுகளில் அவ்வப்போது நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம், குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட காட்டு குப்பையில், 1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் நடந்து வருகிறது. ஒரு பிரிவில், 125 மெகாவாட் வீதம் நான்கு பிரிவுகளில், 500 மெகாவாட் உற்பத்திகான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இதற்காக, எமரால்டு அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை வெளியேற்றினால் மட்டுமே, மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், கடந்த இரு வாரங்களுக்கு மேலாக அணையிலிருந்து வினாடிக்கு, 1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குந்தா அணையில் சேகரிப்பு
எமரால்டு அணையில் வெளியேற்றப்படும் தண்ணீர் நீரோடை வழியாக குந்தா அணையில் சேகரமாகி வருகிறது. இந்நிலையில், குந்தா அணையில் பாதி அளவுக்கு சேறும், சகதியும் நிரம்பி உள்ளது. மறுபுறம் எமரால்டு அணையில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் குந்தா அணையில், இதற்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
வினாடிக்கு 300 கன அடி திறப்பு
இதனால், நேற்று முன்தினம், 3:00 மணி அளவில் திடீரென குந்தா அணையில் இரு மதகுகள் வழியாக வினாடிக்கு, 300 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
குந்தா அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நீரோடை வழியாக பில்லுார் அணைக்கு சென்று அங்கிருந்து மேட்டுப்பாளையம் வழியாக பவானி அணைக்கு செல்கிறது.
இதனால், அப்பகுதிகளில் விவசாயம்; குடிநீர் தேவைக்கான நீர் கிடைத்துள்ளது. இந்நிலையில்,நேற்று தண்ணீர் நிறுத்தப்பட்டது. மழையால் தண்ணீர் அதிகரிக்கும் பட்சத்தில் அவ்வப்போது திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நடப்பாண்டு கோடை, தென்மேற்கு பருவமழை அதிகளவு பெய்தது. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. குந்தா, பைக்காரா மின் வட்டத்தில், 13 அணைகள், 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. அதில் உள்ள, 12 மின் நிலையங்களில் மொத்தம் உள்ள, 32 பிரிவுகளில், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். தற்போதைய சூழ்நிலையில் நாள்தோறும், 500 முதல் 600 மெகாவாட் வரை தேவைக்கேற்ப மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.