UPDATED : நவ 18, 2026 08:20 PM
ADDED : நவ 18, 2026 08:20 PM
பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதனை சார்ந்து சேரம்பாடி, கண்ணம்வயல், கோல்ஸ்லேண்ட், கோரஞ்சால், மண்ணாத்தி வயல், சோலாடி, சப்பந்தோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் மருத்துவ தேவைக்காக, ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வரும் நிலையில் போதிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இங்கு ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ள நிலையில், இரவு நேரங்களில் அவசர சிகிச்சைகளுக்கு டாக்டர் மற்றும் செவிலியர்கள் இல்லாமல், நோயாளிகள் கேரளா மாநில தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பா.ம.க.. மாவட்ட தலைவர் அம்சா முதல்வருக்கு அனுப்பி மனுவில், ‘ஆரம்ப சுகாதார நிலையம் குறிப்பிட்ட நேரங்களை திறந்து செயல்படுகிறதா என்பது குறித்தும், இங்கு நடக்கும் சிகிச்சை முறைகள் பற்றியும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இங்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்,’ என, கூறப்பட்டுள்ளது.
