UPDATED : நவ 18, 2026 08:02 PM
ADDED : நவ 18, 2026 08:02 PM

கூடலுார்:
கூடலுார் புளியாம்பாறை பகுதி விவசாயிகள் நெல் விவசாயத்தை கைவிட்ட நிலையில், காய்கறி உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கூடலுார் புளியம்பாறை பகுதியில், வயல்களில் பருவ மழையின் போது, நெல் விவசாயமும், கோடையில் காய்கறியும் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில், 400 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் மேற்கொண்டு வந்த நிலையில், காலநிலை மாற்றம், பாசன நீர் பற்றாக்குறை, தொழிலாளர்கள் கூலி, காட்டு யானைகள் பிரச்னை காரணமாக, நெல் விவசாயத்தை விவசாயிகள் படிப்படியாக கைவிட்டு, நேந்திரன் வாழை, இஞ்சி பயிரிட துவங்கினர். கடந்த சில ஆண்டுகளாக, 10 ஏக்கருக்கு குறைவாகவே நெல் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில், இந்த பரப்பும் படிப்படியாக குறைந்து, நடப்பாண்டு, பூ புத்தரி அறுவடை திருவிழாவுக்காக, மட்டும், 25 சென்ட் நிலத்தில் நெல் விவசாயம் செய்துள்ளனர்.
மேலும், பருவமழையும் பொய்த்த நிலையில், வயல் நிலங்களில் பயறு, பாகற்காய் மிளகாய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட துவங்கியுள்ளனர்.
விவசாயி பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘சில ஆண்டுகளுக்கு முன் பருவமழை காலத்தில், நெல் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தது. பல்வேறு காரணங்களால் நெல் விவசாயம் கைவிடப்பட்டு, நேந்திரன் வாழை இஞ்சி பயிரிட்டு வருகிறோம். தற்போது வயல்களில் காய்கறி விவசாயத்தை மேற்கொண்டுள்ளோம். அரசு மானிய உதவிகள் வழங்கி ஊக்கப்படுத்தினால் மீண்டும் நெல் விவசாயம் செய்வதற்கு விவசாயிகள் தயாராக உள்ளனர்,’’ என்றார்.
