/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுப்பதற்கான அரசு அறிவிப்பு என்னாச்சு:17 நாட்களாக விவசாயிகள் காத்திருக்கும் அவலம்
/
குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுப்பதற்கான அரசு அறிவிப்பு என்னாச்சு:17 நாட்களாக விவசாயிகள் காத்திருக்கும் அவலம்
குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுப்பதற்கான அரசு அறிவிப்பு என்னாச்சு:17 நாட்களாக விவசாயிகள் காத்திருக்கும் அவலம்
குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுப்பதற்கான அரசு அறிவிப்பு என்னாச்சு:17 நாட்களாக விவசாயிகள் காத்திருக்கும் அவலம்
ADDED : ஜூன் 23, 2024 11:49 PM

அன்னூர்:அரசு அறிவித்து 17 நாட்கள் ஆகியும், கோவை மாவட்டங்களில் குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க ஒருவருக்கு கூட அனுமதி வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் வளத்தைப் பெருக்க, விவசாய நிலங்களுக்கு புதிதாக குளத்து மண், ஆற்றுமண், அணைக்கட்டு நீர் தேக்க மண் ஆகியவை தேவைப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு,குளம், குட்டை மற்றும் நீர் தேக்கப்பகுதியில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்வோர் இலவசமாக மண் எடுக்க அனுமதி அளித்து 17 நாட்களுக்கு முன் ஆணை பிறப்பித்தது.
ஒருவருக்கு கூட அனுமதியில்லை
கோவை மாவட்டத்தில், நீர் வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 83 குளம், குட்டைகளில், விவசாயிகள் வண்டல் மண் மற்றும் மண் எடுக்க அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதில் அன்னூர் தாலுகாவில் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 22 குளங்களும், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 3 குளங்கள் என 25 குளங்களில் மண் எடுக்க அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை ஒருவருக்கு கூட அனுமதி வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையம் தாலுகாவில், பெள்ளாதி, வெள்ளியங்காடு ஆகிய இரண்டு குளங்களிலும் தண்ணீர் உள்ளதால், இதில் வண்டல் மண் எடுக்க வாய்ப்பு இல்லை.
அதனால், காரமடை ஒன்றியத்தில், 17 ஊராட்சிகளில் உள்ள, குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் வண்டல் மண் எடுக்க, விவசாயிகள், தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர்.
காரணம் என்ன?
பாரதீய ஜனதாவை சேர்ந்த விவசாயிகள் அன்னூர் தாலுகா அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் திருமூர்த்தி தலைமையில் அளித்த மனுவில், 'அன்னூர் ஒன்றியத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில், அரசு கோரிய ஆவணங்களுடன், குளம், குட்டைகளில், மண் எடுக்க விண்ணப்பங்கள் தரப்பட்டது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. தற்போது மழை இல்லாமல் உள்ளது.
இந்த சூழ்நிலையில் குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுப்பது எளிது. பருவமழை துவங்கி விட்டால் குளத்தில் மண் எடுப்பது சிரமம். எனவே, விரைவில் விவசாயிகள் குளம் குட்டைகளில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். காலதாமதத்திற்கான காரணம் தெரியவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தனர். இது குறித்து, விவசாயிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வெள்ளக்கிணறு காளிச்சாமி கூறுகையில்,ஒவ்வொரு விவசாயியும், அவர்களுடைய சிட்டா, அடங்கல் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதற்கேற்ப மண், வண்டல் எடுக்க அனுமதிக்கப்படும்.
தற்போது, அனைத்து தாலுக்கா அலுவலகங்களிலும் ஜமாபந்தி மேற்கொள்ளப்பட்டு வருவதால், சிட்டா, அடங்கல் தொடர்பான பதிவேடுகள் தாலுகா அலுவலகங்களில் உள்ளன.
தற்போது விவசாயிகள் மண், வண்டல் கோரி விண்ணப்பித்திருந்தாலும், அவை ஜமாபந்திக்கு பின்னரே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.