/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிசை இல்லா கிராம திட்டம் என்ன ஆச்சு; அச்சத்தில் வாழும் மக்கள்! பழங்குடியினருக்கு விடிவு இல்லையா?
/
குடிசை இல்லா கிராம திட்டம் என்ன ஆச்சு; அச்சத்தில் வாழும் மக்கள்! பழங்குடியினருக்கு விடிவு இல்லையா?
குடிசை இல்லா கிராம திட்டம் என்ன ஆச்சு; அச்சத்தில் வாழும் மக்கள்! பழங்குடியினருக்கு விடிவு இல்லையா?
குடிசை இல்லா கிராம திட்டம் என்ன ஆச்சு; அச்சத்தில் வாழும் மக்கள்! பழங்குடியினருக்கு விடிவு இல்லையா?
ADDED : ஏப் 11, 2024 04:52 AM

பந்தலுார் : குடிசை இல்லா கிராமங்களை உருவாக்குவதாக அரசு தெரிவித்து வரும் நிலையில், பந்தலுாரில் பல பழங்குடியினர் கிராமங்களில் பாதுகாப்பற்ற குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
குடிசை வீடுகள் இல்லாத கிராமங்களை உருவாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் மூலம் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தரம் இல்லாத பணிகள்
இதில் பல வீடுகள் வசதி படைத்தவர்களுக்கும், ஏற்கனவே வீடு உள்ளவர்களுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பரிந்துரையுடன், அரசு துறை அதிகாரிகள் அனுமதியுடன் கட்டி தரப்படுகின்றன. ஆனால், மலை மாவட்ட மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், தரம் இல்லாமலும் பல கிராமங்களில் வீடு கட்டும் பணி பல ஆண்டுகளாக பாதியிலும் நிற்கிறது.
மேலும், பல கிராமங்களில் குடிசை வீடுகளில் பாதுகாப்பற்ற சூழலில் பழங்குடியின மக்கள் வாழும் நிலையும் தொடர்கிறது. கோடை காலங்களில் சூரிய வெப்பமும், மழை காலத்தில் மழை நீரும் வருவதால், மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இதுபோன்ற கிராமங்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்காமல் பெயரளவுக்கு அரசின் நிதிகளை செலவழிக்கும் நிலை தொடர்கிறது. இதனை மேல்மட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதும் முக்கிய காரணம்.
விழும் அபாயத்தில் குடிசைகள்
இதற்கு உதாரணமாக, சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட எடத்தால் பகுதியில், மூன்று பழங்குடியின குடிசைகள் உள்ள நிலையில், இந்த வீடுகளை கூட கட்டித்தராமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் ஒப்பந்ததாரர்கள் யாரும் இவர்களுக்கு வீடு கட்டி தர முன் வருவதில்லை.
இதனால், இந்த குடிசை 'எப்போது விழுமோ' என்ற அச்சத்தில் பாதுகாப்பற்ற சூழலில் பழங்குடி யின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்து மக்களும் வார்டு உறுப்பினர் முதல் அதிகாரிகள் வரை, மனுக்கள் கொடுத்தும் தீர்வு கிடைக்காமல் பழங்குடிகள் திண்டாடி வருகின்றனர்.
கிராம மக்கள் கூறுகையில், ' மத்திய, மாநில அரசுகள் குடிசைகள் இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என்று கூறும் நிலையில், எங்கள் குடிசைகள் கூட சீரமைக்கப்படாமல் உள்ளன. இது போன்ற கிராமங்களில் உள்ள குடிசை வீடுகளை அகற்றி, தரமான புதிய வீடுகளை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், எத்தனை தேர்தல் வந்தும் எந்த பயனும் இல்லை,' என்றனர்.

